மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதியை ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்றுமுன்தினம் மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹிடல்கோ நகருக்குள் நுழைவதற்கு அகதிகள் பலர் முயற்சித்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை ரோந்து படை வீரர் ஒருவர், அகதிகளை விரட்டியடிக்க முயற்சித்தார். ஒரு கட்டத்தில் அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அகதிகளை அச்சுறுத்தினார். இதைக் கண்டு பயந்த அகதிகள் வந்த வழியே திரும்பி ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் இதனைப் பொருட்படுத்தாமல் முன்னேறி வந்தார். இதையடுத்து எல்லை ரோந்து படை வீரர் துப்பாக்கியால் அந்த நபரை சுட்டார். இதில் அவர் இரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதனைத் தொடர்ந்து எல்லை ரோந்து படை வீரர் அந்த நபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.