அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்தது.இந்த பேச்சுவார்த்தை இணக்கமாக அமைந்ததால் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட ஈரான் கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்களை அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாரசீக வளைகுடாவில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் யு.ஏஸ்.சி.ஜி.சி பரனோப் போர்க்கப்பலை அச்சுறுத்தும் விதமாக ஈரான் கடற்படையின் 3 கப்பல்கள் மிகவும் நெருக்கமாக வந்தன. கப்பலில் இருந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் ஒலிபெருக்கி மூலம் பலமுறை எச்சரித்தும் ஈரான் கப்பல்கள் விலகிச்செல்லாமல் நெருக்கமாக வந்து கொண்டிருந்தன. அதனைத் தொடர்ந்து கடற்படை வீரர்கள் எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின்னர் ஈரான் கப்பல்கள் அமெரிக்க போர்க்கப்பலிடம் இருந்து விலகிச் சென்றன.