அண்டார்டிகாவில் இருந்து உடைந்த ராட்சத பனிப்பாறை!

அண்டார்டிகாவில் இருந்து உடைந்த ராட்சத பனிப்பாறை!

பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா கண்டமானது, முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். இந்த கண்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு கூடங்களை அமைத்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் உலகில் தற்போது நிலவி வரும் புவி வெப்பம் காரணமாக பூமியின் தெற்கு முனையைச் சேர்ந்த இந்த குளிர்ப் பிரதேசமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகளும், பனி மலைகளும் நாள்தோறும் உருகத் தொடங்கியிருக்கின்றன. இதன் காரணமாக கடல் மட்டம் உயரும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும் நீண்ட காலமாகவே உலக நாடுகளை எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்டார்டிகா கண்டத்தில் இருந்து தற்போது ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை தனியாக பிரிந்து சென்றுள்ளது. இந்த பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது என்றும் 175 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் கொண்டது என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோப்பர்நிகஸ் செண்டினல்-1 என்ற செயற்கைகோள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம், இந்த தகவல் உறுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பனிப்பாறைக்கு ஏ-76 (A-76) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பூமியில் தற்போது உள்ள பனிப்பாறைகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பரப்பளவு 1,213 சதுர கி.மீ ஆகும். இதன்படி இந்த ஏ-76 பனிப்பாறையானது பரப்பளவில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை விட 4 மடங்கு பெரியது ஆகும்.

இருப்பினும் இந்த பனிப்பாறை ஏற்கனவே வெடெல் கடலில் மிதக்கத் துவங்கி இருந்ததாகவும், இதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பருவநிலை மாற்றத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் இந்த ஏ-76 பனிப்பாறை இன்னும் சில காலத்தில் இது 2 அல்லது 3 துண்டுகளாக பிரிந்து சென்றுவிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *