தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமை தேவையற்றது, என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பில் இன்றைய தினம் க.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு சொல்லும் போது அரசாங்கத்தில் அங்கங்கம் வகிக்கும் வேறு சிலர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடந்தவுள்ளதாக கூறுகின்றார்கள். ஆகவே அரசாங்கம் அவ்வாறும் கூறுகின்றது இவ்வாறும் கூறுகின்றது .
சரத் வீரசேகர கூறுவது தமிழ் மக்களுக்கென்று எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுக்கக் கூடாது, இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள் தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் கருத்துடையவர் அவர்.
அவருடைய கருத்து பிழையானது என்பதனை நான் பல தடவைகள் எடுத்துக்கூறி வந்திருக்கின்றேன். அதாவது அவருடைய கருத்து என்று சொல்லுவதை விட அவர் கூறும் அந்த கருத்து என்று சொல்லலாம்.
உதாரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே சிங்களவர்கள் எந்த காலத்திலும் பெரும்பான்மையாக இருக்கவில்லை. சரத் வீரசேகர பிழையான கருத்துக்களை பிழையான அடிப்படையில் வெளியிட்டு வருகின்றார்.
அவர் அவ்வாறு செய்வதால் இந்த நாட்டிலே மக்களிடையே சௌஜனியமும், நல்லுறவும் ஏற்படாது என்பதனை அவர் மனதிலே வைத்திருக்க வேண்டும்.
எனவே அவருடைய கருத்தை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெராவித்துள்ளார்.