இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் எந்தவொரு வெளிநாட்டுப் படகும் உடனடியாக கைதுசெய்யப்படும் என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக்க த சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 54 பேர் ஸ்ரீலங்கா கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தலையீட்டை அடுத்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி வழங்கிய உத்தரவிற்கு அமைய அவர்கள் அனைவரும் 72 மணித்தியாலங்களுக்குள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் இந்திய மீனவர்களை கைதுசெய்யும் விடயத்தில் கொள்கை மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக்க த சில்வாவிடம் ஆங்கில ஊடகமொன்று வினவியுள்ளது.
எனினும் அவ்வாறான அறிவிப்புக்கள் எதுவும் தமக்கு விடுக்கப்படவில்லை எனவும் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களால் உள்நாட்டு மீனவர்கள் மாத்திரம் அல்லாமல் நாட்டின் மீன்வளமும் பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றது என ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் இவ்வாறான சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் தொடர்ச்சியான ரோந்து பணிகளை முன்னெடுத்துவருவதாகவும் ஸ்ரீலங்கா கடற்படை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படும் நடவடிக்கை இடைநிறுத்தப்படமாட்டாது என அத்துறைக்கு பொறுப்பான அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவும் உறுதி வழங்கியுள்ளார்.சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் கடல்வளங்கள் அழிக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.