சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியா, ‘ஐநா பாதுகாப்பு சபையில் அதற்கு போதிய ஆதரவு இல்லை’ என்ற அதன் காரணத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேள்விக்குட்படுத்தியுள்ளது
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதில் முன்னுக்கு நின்று உழைத்த பிரித்தானியா, இன்று தனக்குத் தானே ஐயுற்று, தன் அற வலிமையைத் துறந்து, இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் இரையானவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை பயன்படுத்த பிரித்தானியா பெரிதும் வருத்ததிற்குரியது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஐ.நா பாதுகாப்புப் சபையில் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் முன்மொழிவு வந்தால் உறுப்பு நாடுகளில் இரண்டு (சீனா, றஸ்யா ?) அதனைத் தடுப்பதிகாரம் கொண்டு தடுக்க வாய்ப்புண்டு என பிரித்தானியா அரசாங்கத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய நிழல் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் கின்னாக் அவர்கள், ஆசியாவுக்கான அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் நைஜல் ஆதாம்சுக்கு எழுதியுள்ள சமீபத்திய கடிதமொன்றில் தெரிவித்திருந்தார்.
அதாவது, றோம் உடன்படிக்கையில் சிறிலங்கா ஒப்பமிட்டவில்லை என்பதால் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் மேலுரிமைக்கு சிறிலங்கா உட்படாது என்றும், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு போதுமான ஆதரவு ஐ நா பாதுகாப்பு சபையில் இல்லை என்பது பிரித்தானியாவின் நிலைப்பாடாக வெளிப்பட்டிருந்தது.இந்நிலையில், பிரித்தானியாவின் இந்நிலைப்பாட்டினை கேள்விக்குட்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சியைத் தடுக்கத் தமது தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் எதுவும் வெளிப்படையாக தெரிவித்த பதிவுகள் ஏதும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிக்கையில்,‘ றோம் உடன்படிக்கையில் சிறிலங்கா ஒப்பமிட்டு ஒரு தரப்பாக இருந்திருக்குமானல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நேராகவே அனைத்துலக குற்ற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுப்பரிடம் சான்றியத்தை அளித்திருக்குமே தவிர, மனிதவுரிமைப் பேரவையோ பிரித்தானிய அரசாங்கமோ இதில் தலையிட வேண்டி ஏற்பட்டிருக்காது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.’ஆகவே, ‘ஐநா பாதுகாப்பு சபையில் போதிய ஆதரவு இல்லை’ என்று பிரித்தானிய அரசு கூறியிருப்பது அப்பட்டமான தீச்செயல் என்று சொல்ல முடியா விட்டாலும், உயர்ந்தபட்சமாக அவசரப் போக்கு, குறைந்தபட்சமாக ஆதாரமற்றது என்றுதான் சொல்ல வேண்டும்.‘
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு, ஐநா பாதுகாப்பு சபைக்குள் எதிர்ப்பேதும் இருப்பதாக பிரித்தானியாவுக்குத் தகவல் கிடைத்திருந்தால், அதன் விவரங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும். ஐநா பாதுகாப்புப் சபையில் தடுப்பதிகாரம் படைத்த உறுப்பு நாடு என்ற முறையில் பிரித்தானியாவுக்குள்ள நம்பகத்தன்மையைக் காக்க இது பெரிதும் பயன்படும்.’ஐநா பாதுகாப்பு அவையில் பிரித்தானிய அரசின் அணுகுமுறையை அந்த அவையின் நிரந்தர உறுப்பரசுகளில் இரண்டின் தடுப்பதிகார நோக்கங்களே தீர்மானிக்க விடலாகாது.றஸ்யாவும், சீனமும் சிரியமீதான மீதான நடவடிக்கைகளைத் தடுக்கப் பதினான்கு முறை தங்கள் தங்கள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி விட்டன.ஐ.நா பாதுகாப்பு சபையில் இரு உறுப்பு நாடுகள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்துவதானது, குடியாட்சிய ஆற்றல்கள் அனைத்தும் ஐ நாவைச் சாராமல் நடவடிக்கை எடுக்க ஊக்கமூட்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் கருத்துரைத்துள்ளார்.சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் வேண்டுகோள் என்பது, ஐ.நா பாதுகாப்பு சபையில் தடுப்பதிகாரம் கொண்டு தடுக்கப்பட்டு விட்டாலும் கூட, அது சிறிலங்காவின் வடக்கு-கிழக்குப் பகுதியில் மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் ஒன்றைத் திறப்பது போன்ற பிற தீர்மானப் பொருட்பாடுகள் மீதான உயராணையர் அலுவலகத்தின் மேலுரிமையை இல்லாமற்செய்து விடாது.தற்போதைய வரைவுத் தீர்மானத்தில் உள்ளகூறுகள், சிறிலங்கா அரசாங்கம் உள்ளகச் செயல்வழியைக் கடைப்பிடிக்கும் படி கோருவதைக் காட்டிலும், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது ஒருவேளை தடுப்பதிகாரத்தினால் தடுக்கப்படுவதும் கூட மேலாகவே இருக்கும். இவ்வாறான கடுங்குற்றங்களைப் புலனாய்வு செய்து வழக்குத் தொடரும் பொறுப்பை அதே சிறிலங்க அரசின் கையில் ஒப்படைப்பது என்பது குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒருபோதும் நீதிபதியாக முடியாது என்ற அடிப்படையான நீதிக் கொள்கையோடு அப்பட்டமாக முரண்படுவதாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைத்துள்ளது.