தமிழ் அரசியல் கைதிகள் சிலரை ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுதலை செய்ததை வரவேற்ற ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைய்னா டெப்லிட்ஸ், தூக்குத்தண்டனை கைதியான துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறித்து ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட டிலான்பெரேரா, பஷில் ராஜபக்சவை புகழ்ந்து கருத்து தெரிவித்த அதேவேளை, அமெரிக்கத் தூதுவரை தகாத வார்த்தையால் விமர்சித்து அகௌரவப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார்.
இலங்கையில் எதிர்க்கட்சியினருக்கும் மற்றும் பலருக்கும் கொரோனா தொற்று அச்சமாக மாறவில்லை. இன்று பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற மீள்வருகையே பாரிய தாக்கமாகிவிட்டது. இந்த நிலையில் கடநத 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒருபுறத்தில் சுனாமி பாதிப்பு, எரிபொருள் விலையேற்றம், பஞ்சம் இருந்தபோது உலகில் சீனாவுக்கு ஒப்பான பொருளாதார வளர்ச்சியை பஷில் ராஜபக்ஷ இலங்கையில் மேற்கொண்டார் .அரசியல்வாதி மற்றும் பொருளாதார ரீதியில் அவர் அதனை நிறைவேற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் அவர் தேசியப்பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார். அவருக்கு ஒன்றும் முடியாது என்றே கூறினார்கள். எனினும் பின்னர் கம்பஹா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு சந்திரிகா குமாரதுங்கவின் வாக்கு வங்கியை உடைத்தெறிந்தே சாதனைபடைத்து மீண்டும் வெற்றிபெற்றார். பொருளாதார நிர்வாகத்தில் அன்று யுத்தத்திற்கும், எரிபொருள், குடிநீர் பஞ்சம் என்பவற்றிற்காக நிதியொதுக்கீடு செய்து பாரிய பணிகளை நிறைவேற்றினார். அதன் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். எமது நாட்டில் எமது கட்சிக்குள் எவரை நியமிப்பது, நீக்குவது என்பது தொலைக்காட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ நிர்ணயிக்க முடியாது.
அதுபோல எமது கட்சியின் உரிமையை கட்சி செய்கின்றது. எனது வரலாற்றில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைதிகளாக தொடர்ந்தும் தடுப்பில் இருப்பதை எதிர்த்தவன். அதற்காக என்னை சிங்களப் புலி என்றும் அன்று கூறினார்கள். இந்த நிலையில் அமெரிக்க தூதுவர், புலிச் சந்தேக நபர்களை விடுவித்ததை வரவேற்றார். ஆனாலும் துமிந்த சில்வா வழக்கில் அவர் ஆழமாக சிந்திக்கவில்லை. துமிந்தவின் வழக்கில் இரண்டு நீதிபதிகளை தவிர்ந்த மற்றவரான பத்மினி ரணவக்க என்ற நீதிபதி, தொலைபேசிக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை தெரியவந்தது.
இந்நிலையில் அவர் எடுத்த தீர்ப்பு நீதியானதல்ல. அந்த வகையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஒரு வார்த்தையை வாயிலும், மறுவார்த்தையை மற்றுமொரு பகுதியிலிருந்தும் வெளியிடக்கூடாது”எனத் தெரிவித்தார்