அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.மேலும் அவ்வப்போது அணு ஆயுதங்களையும் சோதித்து வந்தது. இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் உருவானது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகான அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்புக்கும் இடையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.இதனிடையே அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றதை தொடர்ந்து, வடகொரியாவுடனான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வடகொரியாவுடனான பதற்றத்தை தணிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளில் அந்த நாட்டு அரசை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் வட கொரியா அவற்றுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் ஜோ பைடன் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.