அரசாங்கம் செய்து முடித்த இரகசிய ஒப்பந்தம்: எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வி!

அரசாங்கம் செய்து முடித்த இரகசிய ஒப்பந்தம்: எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வி!

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள வேளையில் திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி ஒப்பந்தத்தை செய்தது ஏன்?  இது தூய்மையான உடன்படிக்கை என்றால் ஏன் இரகசியமாக செய்து முடித்தீர்கள்? என சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) கேள்வி எழுப்பினார்.

மேலும், இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதய கம்மன்பில, (Udaya gammanpila) இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை மிக தெளிவாகவும் முறையாகவும் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி உடன்படிக்கையை சபைப்படுத்துவேன் எனவும் சபையில் வாக்குறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் 20-01-2022 ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போது உதய கம்மன்பில கூறியது,

இன்றைய நெருக்கடிக்கு கொரோனா காரணம் அல்ல, 1955 ஆம் ஆண்டில் இருந்து கடன்களை பெற்று வருமானத்தை விடவும் அதிகமாக செலவுகளை செய்ததற்கான விளைவுகளையே இன்று நாம் அனுபவித்து வருகின்றோம். ஆகாவே இந்த நிலைமைக்கு இதுவரை காலமாக ஆட்சி செய்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக்கூறியாக வேண்டும்.

இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாது. நாம் இன்று நெருக்கடியில் உள்ளோம் என்ற உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், உண்மை கசப்பாக இருந்தாலும் அதனை எம்மால் நிராகரிக்க முடியாது.

இந்த நாட்டின் உரிமையாளர்கள் மக்களே, எனவே அவர்களுக்கு உண்மையை கூறியாக வேண்டும். அதுமட்டுமல்ல நெருக்கடியில் இருந்து மீளும் தேசிய வேலைத்திட்டத்தை உடனடியாக முன்வைக்க வேண்டும்.

மேலும், திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையம் குறித்து இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை இரகசியமானதென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்தினர்.

ஆனால் இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள முன்னர் மூன்று தடவைகள் சகல கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன். அதுமட்டுமல்ல அமைச்சரவைக்கு தெரியப்படுத்தினேன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் தெளிவு படுத்தினேன்.

ஆகவே இவ்வாறான தெளிவான முறையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல:

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த வேளையில் ஏன் இந்த உடன்படிக்கையை செய்தீர்கள், பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் நடத்தாது, மூடி மறைத்தது ஏன், இன்றுவரை உடன்படிக்கை சபைப்படுத்தப்படவில்லை ஏன் என்பதற்கு பதில் கூறுங்கள் என்றார்,

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில :

தற்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் இடம்பெறுகின்ற காரணத்தினால் எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி இந்த உடன்படிக்கையை சபைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *