நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர் பீடக் குழுவினருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமான சந்திப்பொன்றை விரைவில் நடத்தவுள்ளது.
இந்தச் சந்திப்புக்கான பூர்வாங்க செயற்பாடுகளை இறுதி செய்யும் வகையில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பில் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது மிக முக்கியமான நீண்டகாலமாக நிடித்துவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது “அரசாங்கத்தரப்பினரும் கூட்டமைப்பும் சந்தித்து உரையாடுவதாக இருந்தால் அது அரசியல் தீர்வினை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டியது கட்டாயமாகின்றது.
ஆகவே அரசியல் தீர்வு விடயத்தில் எவ்விதமான விடயங்களை பரஸ்பரம் கலந்துரையாடலாம் என்பது தொடர்பில் முதலில் இணக்கப்பாடுகளை எடுக்காது சந்திப்புக்களையும் பேச்சுக்களையும் நடத்துகின்றமை காலத்தினை விரயமாக்கும் செயற்பாடாகவே இருக்கும்.
ஆகவே அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்விதமான நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வது எமக்குள்ள முதலாவது கரிசனையாகவுள்ளது” என்ற தொனிப்பட சுமந்திரன் அமைச்சர் பேராசிரியர்.ஜி.எல்.பீரஸிடம் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அச்சமயத்தில் அமைச்சர் பேராசிரியர்.ஜி.எல்.பீரிஸ் “அரசாங்கம் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதில் கரிசனை கொண்டுள்ளது. அத்துடன் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பூகோள பிராந்திய அரசியல் சூழமைகளுக்கு அமைவாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து நடைமுறைச்சாத்தியமானதும் தீர்க்கமானதுமான விடயங்களை முன்னெடுப்பதில் அதிகளவு கரிசனை கொண்டிருக்கின்றது” என்று பேராசிரியர்.ஜி.எல்.பீரிஸ் பதிலளித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.