நாகோர்னோ-காராபாக் என்ற மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தமானது என்பதில் முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இரு தரப்பினரும் அவ்வப்போது ஆயுத தாக்குதல்கள் நடத்தி மோதி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று அஜர்பைஜானுக்குள் எல்லை தாண்ட முயற்சித்த அர்மீனிய படை வீரர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இதுகுறித்து அஜர்பைஜான் ராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.அதில் கூறி இருப்பதாவது:-
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் அர்மீனிய ஆயுதப்படைகளின் உளவு மற்றும் நாசவேலைக்குழுவினர், கல்பஜார் மாவட்டத்தில் யுகாரி அய்ரிம் குடியேற்ற பகுதியில், அர்மீனிய, அஜர்பைஜான் எல்லையை கடக்க முயற்சித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காலையில் அர்மீனிய ஆயுதப்படைகளின் பல ராணுவ வாகனங்கள், டாங்கிகள் நடமாட்டத்தை எல்லையில் பார்த்தோம். நாங்கள் எடுத்த நடவடிக்கையின் விளைவாக அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்படடன. இந்த பகுதியில் நிலைமை இப்போது நமது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.