இலங்கைக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி முன்னேற்றங்கள் குறித்து தேவையான அனைத்து அறிவியல் தரவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது.
இலங்கை சுகாதார அமைச்சு, ரஷ்ய சுகாதார அமைச்சு மற்றும் ரஷ்யாவின் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் மூலம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது தடுப்பூசி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், அதன் பாதுகாப்பு மற்றும் செயற்திறன், மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் மற்றும் ஒப்புதல்களின் நிலை குறித்து இரு தரப்பும் விவாதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் தொற்றுநோயை எதிர்கொள்ளக் கூடிய சர்வதேச விஞ்ஞான ஒத்துழைப்பின் முக்கியத்தும் மற்றும் இரு நாடுகளின் சுகாதார தொடர்பான உறவை விரிவுபடுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையில் வைரஸ் மாற்றங்கள் மற்றும் இலங்கையின் நோய்த்தடுப்பு திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி குறித்து இலங்கை தரப்பு ரஷ்ய நிபுணர்களுக்கு விளக்கமளித்ததாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.