அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.இதனைத்தொடர்ந்து இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 277 ஓட்டங்களை எடுத்திருந்தது.பின்னர் 131ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
எனினும் அவுஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 66 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்களை எடுத்து 2 ஓட்டங்கள் மாத்திரமே முன்னிலை பெற்றிருந்தது.அதைதொடர்ந்து இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் கேமரூன் கிரீன் 17ஓட்டங்களுடனும், கம்மின்ஸ் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இறங்கினர்.
இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சில் இந்த ஜோடியில் பேட் கம்மின்ஸ் 22ஓட்டங்களும், சிறப்பாக ஆடிய கேமரூன் கீரின் 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் அவுஸ்திரேலியா அணி 103.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200ஓட்டங்களை எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அவுஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 69 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 70 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறக்கினர். இதில் மயங்க் அகர்வால் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் 3 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்ததாக சுப்மன் கில்லுடன், கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ஓட்டங்கள் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து கலக்கிய இந்த ஜோடி, அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் சுப்மன் கில் 35 ஓட்டங்களும் ரஹானே 27 ஓட்டங்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் இந்திய அணி 15.5 ஒவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், அவுஸ்திரேலியா அணியும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையிலுள்ளது.