காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தான் நிறைவேற்ற இருக்கும் 7 அம்ச திட்டத்தை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்:வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
2. நவீன தற்சார்பு கிராமங்களை உருவாக்குதல்: தமிழக மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதை தடுக்கும் வகையில் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் நவீனமாக அக்கிராமங்கள் அமையும்.
3. துரித நிர்வாகம்: சாதாரண பஞ்சாயத்து அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை காகிதங்களே இல்லாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உடனுக்குடன் அரசுக் கோப்புகள் நகரும் வகையில் துரித நிர்வாகம் அமைக்கப்படும். லஞ்ச ஒழிப்புத் துறையை மேம்படுத்தி லஞ்சமே இல்லாமல் இருக்கும் வகையில் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
4. சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்: மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல் அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெறுவதற்காக மக்களைத் தேடி அரசுத் திட்டங்கள் சென்றடையும் வகையில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.
5. மின்னணு இல்லங்களாக மாற்றுதல்: குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் திறமையையும் தகுதியையும் கண்டறிந்து அவர்களை கல்வி, பொருளாதாரம் உள்பட அனைத்திலும் முன்னேற்றமடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
6. இயற்கை வேளாண்மையுடன் கூடிய பசுமைப்புரட்சியை உருவாக்குதல்: இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
7. தொழில்களை அதிகளவில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்துதல்: பெரு தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்குவதை விட ஒவ்வொரு வட்டாரம் வாரியாக 5லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்