சிறிலங்காவின் செழிப்பை உறுதி செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நல்லாட்சி, சட்டம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஒன்றாக இணைந்து செயற்பட முடியுமென, சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமெரிக்கத் தூதுவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சிறிலங்கா ஒரு இறையாண்மை கொண்ட நாடு, தமது நட்பினை எப்படி நிர்வகிப்பது என்பதை சிறிலங்கா மக்களே தீர்மானிக்க வேண்டும். இலங்கையுடன் மாத்திரமல்ல – வேறு எந்த நாட்டுடனும் எமது உறவுகள் வெளிப்படையானது. அது பரஸ்பர நன்மை பயக்கும் என நாம் நம்புகிறோம்.
சிறிலங்காவுடன் அமெரிக்காவுக்கு அப்படிப்பட்ட உறவு காணப்படுவதாகவே நாம் நம்புகிறோம். அதற்கும் மேலாக, எங்களுக்கும் ஒரு கூட்டு உறவு காணப்படுகின்றது. அந்த உறவு இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். வெளிப்படையான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள அனுமதிப்பதோடு, மதிப்புகள் மற்றும் நலன்களைச் சுற்றியுள்ள ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியைக் கூட நான் பரிந்துரைக்கிறேன்.
எங்கள் உறவு 70 வருடங்களுக்கு மேலாக காணப்படுகின்றது. 60 வருடங்களாக நாங்கள் ஸ்ரீலங்காவிற்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கி வருகிறோம், எனவே ஒரு பரிவர்த்தனையை விட உறவில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். உண்மையில் இதுவொரு கூட்டுறவு. நிர்வாகம், பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல் மார்க்கங்களை உள்ளடக்கிய பொருளாதார வலையங்களை பாதுகாத்தல் அல்லது அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களில் நாம் இணைந்து செயற்படுகின்றோம்.
இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்த நலன்கள் என்பதோடு, இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவிற்கு பரந்த நலன்கள் காணப்படுகின்றன. எனவே இவை ஒன்றோடொன்று தொடர்புடைய அம்சங்கள். ஜனநாயக நாடுகளாக அமெரிக்காவும் சிறிலங்காவும் பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.
நல்லாட்சி, சட்டம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நாம் ஒன்றாக இணைந்து செயற்பட முடியும், நிச்சயமாக சிறிலங்காவின் செழிப்பை உறுதி செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவோம் என்றார்.