வைத்தியசாலை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையங்களில் பதிவிடப்பட்டது போன்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவசரகால சூழ்நிலைகளில் சிந்தித்து செயற்படுமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த படங்களில் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா நோயாளிகளா? என்பதை உறுதி செய்வது கடினம் எனவும், பொதுவாக, கொரோனா நோயாளிகள் மூடப்பட்ட அறைகளில் தங்கவைக்கப்படுவார்கள் எனவும், அங்கு வெளியாட்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகள் நிரம்பியுள்ளதாகவும், எனினும் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது செயற்பட ஒரு அமைப்பு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தம்மை பொறுத்தவரையில், வைத்தியசாலைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளுக்கு இடமளிக்கவும், அவர்கள் நன்றாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.