இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தர்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்த நாட்டு அரசு 30 நாட்கள் தடை விதித்து இருக்கிறது.இந்தியா, பாகிஸ்தானில் இருந்து கனடா வரும் பயணிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது அதிகரித்து இருக்கிறது. எனவே இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானத்துக்கும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கும் கனடா போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.
அனைத்து வணிக தனி விமானங்களுக்கும் இந்த 30 நாள் தடை பொருந்தும். என்றாலும் சரக்கு விமானங்களுக்கு தடை இல்லை என்று கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா கூறியதாவது:-இந்தியாவில் இருந்து கனடா வரும் விமான பயணிகளுக்கு அதிகளவில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பாகிஸ்தானில் இருந்து வருவோருக்கும் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே இந்த நாடுகளில் இருந்து கனடாவுக்கு பயணிகள் விமானம் வர 30 நாட்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.