இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா சவாலை சமாளிக்க தன்னால் இயன்ற உதவியை இலங்கைக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற தனது முதல் இராஜதந்திர சந்திப்பின் போது சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் லீ ஜான்ஷு மேற்படி உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
வீடியோ தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற இச்சந்திப்பில் சீனா மற்றும் இலங்கையின் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.குறிப்பாக பிரதி சாபாநாயகரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் ஜி எல் பீரிஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.தற்போது இலங்கையில் நிலவும் கொவிட் -19 தொற்றுச் சூழலால் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை சமாளிக்க சீனாவின் உதவியை பிரதி சாபாநாயகர் இதன் போது கேட்டுக் கொண்டார்.இதேவேளை கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும் இதன் போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
சீனா மூன்று மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளதுடன், இலங்கைக்கு மொத்தம் 18 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன் போது தெரிவித்தார்.