நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு- நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினருக்கு இன்றைய தினம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிடின் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும். இது சுற்றுலா, விமான நிலையம் மற்றும் ஏனைய துறைகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ , மருத்துவ சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷாந்த பத்திரண மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.