இலங்கைக்குள் ஐ.நா. நேரில் களமிறங்கும்! வெளியான எச்சரிக்கை

இலங்கைக்குள் ஐ.நா. நேரில் களமிறங்கும்! வெளியான எச்சரிக்கை

“2022 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரை ஆட்சியாளர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் எனத் தெரியவில்லை. உறுப்புரிமை நாடுகள் இம்முறை இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டிருக்கமாட்டார்கள். நடைமுறைக்குச் சாத்தியமான நடவடிக்கையில் அவர்கள் நேரில் களமிறங்குவார்கள்.”

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட எதிரணியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேலும் கூறியதாவது:- “சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின்றி இலங்கை போன்ற நாடுகளால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது.

உள்நாட்டு போர் முடிவடைந்த பிறகு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நான் முக்கியமானதொரு விடயத்தை சுட்டிக்காட்டிருந்தேன். அதாவது மண்டேலாவின் வழி, முகாபேயின் வழியென இரண்டு வழிகள் உள்ளன. மண்டேலாவின் வழியைத் தெரிவு செய்யுமாறு கோரினேன். ஆனால் முகாபேயின் வழியையே மஹிந்த ராஜபக்ச தெரிவுசெய்தார்.

இதன் விளைவு என்ன? ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2015 மார்ச்சில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தாலேயே முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அவர் தோல்வியைச் சந்தித்தார்.

தற்போதைய அரசும் இதே வழியில்தான் பயணிக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நாட்டுக்குத் தோல்வி ஏற்படுகின்றது. சர்வதேச ஒத்துழைப்பு இருந்தால் பல விடயங்களை சாதித்துக்கொள்ளலாம். குறிப்பாக நல்லாட்சியின்போது நாம் அதனை செய்தோம். மின்சாரக் கதிரை அபாயத்திலிருந்து மஹிந்தவைப் பாதுகாத்தோம்.

ஆனால், இந்த அரசால் சர்வதேச ஆதரவைப் பெற முடியாதுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மீண்டும் கூடவுள்ளது.

இம்முறை அதனை ஆட்சியாளர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் எனத் தெரியவில்லை, இம்முறை தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டிருக்கமாட்டார்கள், நடைமுறைக்கு சாத்தியமான நடவடிக்கையில் இறங்குவார்கள்.

ஏனெனில் தீர்மானம் நிறைவேற்றி பயனில்லை என்பதை அறிந்துள்ளனர். இது தொடர்பில் நான் வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளேன்” – என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *