இலங்கைக்கு மூன்று நாட்கள் காலக்கெடு விதித்த சீனா!

இலங்கைக்கு மூன்று நாட்கள் காலக்கெடு விதித்த சீனா!

சீன சேதன உர நிறுவனம், சிறிலங்கா அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்ட ஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. சீன நிறுவனம், தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி டப்ளியூ.ஏ.ஆர்.ரி. விக்ரமாராச்சியிடமே இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. இந்த கடிதம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி கிடைக்கப் பெற்று மூன்று நாட்களுக்குள் தமக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் சீன நிறுவனம் அறிவித்துள்ளது. அவ்வாறு இழப்பீட்டு தொகையை செலுத்தவில்லை என்றால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சீன நிறுவனம் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலின் ஏற்றுமதியாளரான Qingdao Seawin Biotech நிறுவனம், தேசிய தாவர தொற்று காப்பு நிறுவனத்திடம் இழப்பீடு கோரி கடிதம் அனுப்பியுள்ளது. தேசிய தாவர தொற்று காப்பு நிறுவனத்தின் கவனயீனமான செயற்பாடு மற்றும் உண்மைக்கு புறம்பான அறிக்கை காரணமாக தமது நிறுவனத்திற்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன நிறுவனம் விநியோகித்த பசளை மாதிரிகளில் ‘Erwinia’ என்ற பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா இருப்பதாக கூறி, சிறிலங்கா, சேதனப் பசளையை ஏற்றிய கப்பலை ஏற்க மறுத்ததை சீன நிறுவனம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சீன நிறுவனம் தனது சட்டத்தரணியான எம்.ஜே.எஸ். பொன்சேகா ஊடாக இழப்பீட்டை கோரி, இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. 

இந்த நிறுவனம் தயாரிக்கும் சேதனப் பசளைகள் அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறான இழப்பீட்டு கடிதமொன்று இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *