ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளதாக அவுஸ்திரேலியா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகமே இவ்வாறு சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கையுடன் இணைந்து சீனர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள துறைமுகத்தை கட்டியமைப்பதில் சீனாவிடம் இருந்து கடனை செலுத்த முடியாததால், அந்த துறைமுகத்தை சீனா கைப்பற்றியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் சீனா உட்பட ஒவ்வொரு நாட்டுடனும் அமைதியான உறவை அவுஸ்திரேலியா விரும்புகிறது என்றும் எனினும் சீனா மாறுப்பட்ட விதத்தில் செயற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவிற்கும் சாலமன் தீவுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் சீனாவின் இராணுவ முகாம் என்று அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா அதனை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஸ்கொட் மொரிசன், இந்த ஒப்பந்தத்தின் கீழ் எந்த சீன கடற்படை தளங்களையும் அனுமதிக்கப்போவதில்லை என்று சாலமன் தீவுகள் அரசாங்கம் கூறியதாக தெரிவித்துள்ளார்.