இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விடயங்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், காலி முகத்திடல் போராட்டக் களத்தில் காட்சிப் படுத்தப்படும் சில இனவாத பதாகைகள் குறித்து வினவியபோதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்
“கடந்த காலங்களில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்தோம். யுத்தத்தின் பின்னரும் சில நேரங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய சில குழுக்கள், சர்வதேசத்தையும் இணைத்துக்கொண்டு இனவாதத்தை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கும் போது, நாம் ஜெனீவாவுக்கு சென்று அதற்கு எதிராக குரல் கொடுத்தோம்“ என்று குறிப்பிட்டார்.
“காலி முகத்திடல் போராட்ட களத்திலிருந்து வெளிவரும் சில கருத்துகளிடையே சிலர் இதனை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றமையை நாம் அவதானிக்கின்றோம்.உதாரணமாக அங்குள்ள அமரர் பண்டாரநாயக்கவின் சிலையின் கண்களை அங்கிருக்கும் சில இளைஞர்கள் கட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரித்தானியாவின் தமிழ் கார்டியன் என்ற இணையத்தில் பண்டாரநாயக்கவின் சிலையை உடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது பண்டாரநாயக்க சிலையின் கண்கள் கட்டப்பட்டுள்ளன“ என்றார்.
“எனவே இந்த இரண்டு சம்பவங்களுக்குமிடையில் தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனவே புத்திசாலியான மக்களிடம் இந்த விடயங்கள் குறித்து தெளிவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என்று கூறினார்.அரசாங்கம், குறித்த போராட்டக்காரர்களுக்கு ஜனநாயக ரீதியான வாய்ப்பை வழங்கியுள்ளது. எனவே அதில் கலந்துகொள்ளும் மக்களும் புத்திசாதுரியத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.