இலங்கையில் தரக்குறைவான எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே ( (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை (29-03-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய வகையில் எரிபொருள் கிடைக்காமையினால் பல எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக பலர் வரிசைகளில் காத்திருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், கொலன்னாவ முனையத்திற்கு டீசல் இருப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக சென்ற பல தாங்கி ஊர்திகள் டீசல் கிடைக்காத காரணத்தினால் ஏற்கனவே கொலன்னாவ கஜபாபுர தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோல் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பிரச்சினைக்கு வலுசக்தி அமைச்சரிடம் இருந்து உடனடி தீர்வை எதிர்பார்ப்பதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.இதேவேளை, இந்திய உதவியின் கீழ் மேலும் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன் டீசலுடனான கப்பலொன்று நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.