இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருக்கும் பிரித்தானியா!

இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருக்கும் பிரித்தானியா!

இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் (Tariq Ahmad) தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் இன்றையதினம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G. L. Peiris) ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கைக்கான தனது விஜயம் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமைச்சர் தாரிக் அஹமட் மேலும் கூறியிருப்பதாவது,

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து இனங்களைச்சேர்ந்த மக்களையும் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றேன்.

உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய – பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்து பிரிட்டன் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பிரித்தானியா பொருளாதார ரீதியான தொடர்புகளை அடிப்படையாகக்கொண்ட வலையமைப்பைக் கட்டியெழுப்பிவரும் அதேவேளை, இவ்விடயத்தில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளது.

அத்தோடு இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்கவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.

பொதுநலவாய அமைப்பில் பிரிட்டனும் இலங்கையும் நீண்டகாலமாக அங்கம்வகிப்பதுடன் சர்வதேசத்தின் கரிசனைக்குரிய பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றி வந்திருக்கின்றன.

அவற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் முக்கியமானவையாகும். பிரித்தானியாவினால் காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 26’ மாநாடு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச நாடுகளின் தலைவர்களின் பங்குபற்றலுடன் கிளாஸ்கோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து சூழலுக்கு நேயமானதும் நிலைபேறானதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை அனைத்துத்தரப்பினருக்கும் உணர்த்துவதை இலக்காகக்கொண்டு இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற பிரித்தானியா தயாராக இருக்கின்றது.

காலநிலைமாற்ற சவால்களைக் குறைப்பதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் தோற்றுவித்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் புதியதொரு பொருளாதாரக்கட்டமைப்பை உருவாக்கல், நிதிச்சேவை வழங்கல் துறையை அபிவிருத்திசெய்தல், வர்த்தக மற்றும் முதலீட்டுத்தொடர்புகளை விரிவுபடுத்தல் ஆகியவற்றுக்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

அந்தவகையில் இலங்கையில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் சமாதானத்தையும் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கான ஆதரவை வழங்கும் அனைத்துத் தரப்பினருக்கும் அவசியமான செயற்திட்டத்தை ஜெனீவாவின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வழங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *