இந்த கப்பலில் யுரேனியம் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல்.அனில் ரஞ்சித் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.இப்போது இந்தக் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறிவிட்டது என்று இலங்கை அரசு தரப்பு தெரிவிக்கிறது.இலங்கைக்குள் ரசாயன பொருட்களை விமானத்தின் ஊடாகவோ கப்பலின் ஊடாகவோ கொண்டு வருவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையிடம் அனுமதி பெறுவது அவசியமானது என எச்.எல்.அனில் ரஞ்சித் கூறுகிறார்.
எனினும், குறித்த கப்பல் எந்தவித அனுமதியும் பெற்றுக்கொள்ளாது, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.இந்த நிலையில், குறித்த கப்பலை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தாம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இதேவேளை, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேறி, இலங்கை கடற்பரப்பிற்குள் நேற்று நங்கூரமிட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
குறித்த கப்பலின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட நிலையிலேயே, கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தந்ததாகவும், இலங்கை கடற்பரப்பிற்கு வைத்து கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.இவ்வாறான நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் நங்கூரமிட்டிருந்த இந்த கப்பல், இன்று காலை, இலங்கை கடல் எல்லையை விட்டு வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.படக்குறிப்பு,
நெதர்லாந்திலிருந்து சீனா நோக்கி பயணித்த குறித்த கப்பலிலேயே, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குறித்த கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளது.இவ்வாறான நிலையில், இந்த கப்பலில் அணு உலைக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இருந்த நிலையில், இந்த விடயம் குறித்து, கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி உரிய தகவல்களை பதிவு செய்யவில்லை என இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவை தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், இந்த கப்பலில் யுரேனியம் கதிர்வீச்சு திரவம் இருந்ததாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் குறிப்பிட்டுள்ளது.இந்த கப்பலில் இவ்வாறான திரவமொன்று காணப்படுகின்றமை குறித்து, இலங்கை துறைமுக அதிகார சபைக்கோ அல்லது ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக அதிகார சபைக்கோ முன்னதாகவே அறிவிக்கவில்லை என அந்த குழுமம் கூறியுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை கடற்படை ஆகியன இணைந்து மேற்கொண்ட சோதனைகளின் ஊடாகவே, இந்த திரவம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், கப்பலை, துறைமுகத்திலிருந்து வெளியேறுமாறு கூறிய இலங்கை அதிகாரிகள், இயந்திர கோளாறை திருத்திக் கொள்வதற்கான அனுமதியை மாத்திரம் வழங்கியிருந்தனர்.இவ்வாறான நிலையில், குறித்த கப்பல் இன்று காலை இலங்கை எல்லையிலிருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, இந்த கப்பலின் உள்நாட்டு பிரதிநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக சூரிய சக்தி, காற்றலை மற்றும் நீர் மின் உற்பத்தி செயற்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.