இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயர் முஷாரப் முதுநபீன். வயது 37, சொந்த ஊர் பொத்துவில். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான ஜனாதிபதி விருது வென்றுள்ள இவர், ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரச தொலைக்காட்சியொன்றில் பணியாற்றிவந்த இவர், அதில் ஒளிபரப்பாகும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றை நடந்தி பிரபலமடைந்தார்.
குறித்த தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய மற்றொரு நிகழ்சியில், அப்போதைய முஸ்லிம் அமைச்சர் ஒருவரை கடுமையாக விமர்சித்தார் எனும் குற்றச்சாட்டில், அந்த நிகழ்ச்சியிலிருந்து முஷாரப் இடைநிறுத்தப்பட்டார்.
இதையடுத்து, குறித்த தொலைக்காட்சியிலிருந்து விலகிய முஷாரப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார். அந்தக் கட்சி சார்பாக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இவர், அதில் வெற்றிபெற்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் – பொத்துவில் பிரதேசத்திலிருந்து தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் சாதனையை முஷாரப் தனதாக்கியுள்ளார்.
அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற – முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேறு கட்சிகளுடன் கூட்டணியமைத்து – பொதுச் சின்னங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களாவர்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள முஷாரப்பை அவரின் சொந்த ஊர் பொத்துவிலில், பிபிசி தமிழுக்காக சந்தித்தோம். பல்வேறு விடயங்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
அமைச்சரின் கோபம்
“ஊடகத்துறைக்குள் நான் நுழைந்தது 2005ஆம் ஆண்டு. அரச தொலைக்காட்சி ‘நேத்ரா’வில் முதல் நியமனம் கிடைத்தது. பிறகு அரசு சார்பில் ‘வசந்தம்’ தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, 2009ஆம் ஆண்டு அங்கு சேர்ந்து கொண்டேன். அந்தத் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை புதிதாக ஆரம்பித்து அவற்றுக்குப் பெயர் வைத்ததில் எனக்கும் பங்குண்டு.
‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ‘சுயாதீன செய்திப்பார்வை’ எனும் பெயரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியினையும் அப்போது நான் தொகுத்து நடத்திக் கொண்டிருந்தேன். பத்திரிகைகளில் வரும் செய்திகளை தொகுத்து வழங்குவதோடு, அந்தச் செய்திகள் குறித்து எமது பார்வையினையும் அந்த நிகழ்ச்சியில் கூறுவதுண்டு”.
“கடந்த அரசாங்க காலத்தில் நடைபெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கையில்லா தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டது. அப்போது அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிணைமுறி மோசடிக்கு எதிராகப் பேசி வந்ததோடு, பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார் எனும் எதிர்பார்ப்பினையும் உருவாக்கியிருந்தார். ஆனாலும், பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றுக்குக்குக் கொண்டுவரப்பட்டபோது, ரவூப் ஹக்கீம் பல்டியடித்தார், பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து அவர் வாக்களித்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து நான் நடத்திவந்த நிகழ்ச்சியில் சில விமர்சனங்களை முன்வைத்தேன். ‘ரவூப் ஹக்கீம் டீல் (deal) அரசியல் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. அதற்கு ஹக்கீம் பதிலளிக்க வேண்டும்’ என, எனது நிகழ்ச்சியில் கூறியிருந்தேன்.
இதனையடுத்து எனக்கு எதிராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடிதமொன்றினை எழுதி, எமது தொலைக்காட்சி நிறுவனத் தலைவருக்கு அனுப்பியிருந்தார். அதன் காரணமாக, அந்த நிகழ்ச்சியிலிருந்து நான் இடைநிறுத்தப்பட்டேன். என்மீது ஒழுங்காற்று விசாரணை நடத்தப்படும் என்று நிர்வாகம் கூறியது. ஆனால் அப்படியொரு விசாரணையை நடத்தாமல் இழுத்தடித்து வந்தார்கள். அதன் காரணமாக, அந்தத் தொலைக்காட்சியிருந்து நான் விலகினேன்”.
அதன் பின்னர்தான் 2018ஆம் ஆண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் முஷாரப் இணைந்து கொண்டார். அப்போது அந்தக் கட்சியில் அவருக்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அந்தப் பயணம்தான் இன்று அவரை – ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
ஏழைத்தாய் கொடுத்த 10 ரூபாய்
“எதிர்கட்சிகள் செய்யும் மாமூல் அரசியலில் இருந்து மாறுபட்டு, நேர்மையாகவும் தூய்மையாகவும் அரசியலைச் செய்ய விரும்பினேன். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு கோடிக்கணக்கில் பணம் வேண்டுமென்றும், போதைப்பொருட்களை வழங்க வேண்டிவரும் எனவும் சிலர் என்னிடம் கூறினர். ஆனால், அவற்றையெல்லாம் நான் பொய்யாக்கினேன். எனது நேர்மையை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்” என்கிறார் முஷாரப்.
“தேர்தலில் அடிப்படைச் செலவுகளுக்குத் தேவையான பணத்தைத் திரட்டிக் கொள்வதற்கே, நான் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தேன். ஒருநாள் எனக்காக வாக்குக் கேட்டு – வீடு வீடாகச் சென்று கொண்டிருந்த போது, எனது ஊரிலுள்ள அல் ஹுதா எனும் பகுதியில் வசிக்கும் வயதான தாய் ஒருவர் 10 ரூபாய் பணத்தை என்னிடம் தந்து ‘இதை வைத்துக் கொள் மகனே’ என்றார். இந்த சம்பவம் என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. தேர்தல் பிரசார மேடைகளில் இந்தச் சம்பவத்தை நான் சொல்லியிருக்கிறேன். இப்படியான பின்னணியில்தான், கடந்த பொதுத் தேர்தலை நான் எதிர் கொண்டேன்”.
“என்னிடம் பணம் இல்லை என்பதை நான் பகிரங்கமாகச் சொன்னேன். அதனால் சிலர் எனக்கு பண உதவி செய்தனர். வெளி ஊர்களில் இருந்தும் சிலர் சிறிய சிறிய தொகையை எனக்கு அனுப்பி வைத்திருந்தனர். வாக்குகளுக்காக பணம் கொடுக்கும் அரசியலை நான் செய்யவேயில்லை”.
கோலியாத் – தாவீது
“இத்தனை காலமும் ஏனைய ஊர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குவாக்குவதற்காகவே எனது ஊரின் வாக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பொத்துவில் பிரதேசத்திலுள்ள வாக்குகளை அடிப்படையாக வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை – அந்த ஊருக்குப் பெற முடியாது என்று காலகாலமாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அது பொய் என்பதை மக்களிடம் கூறினேன். பொத்துவில் மக்களின் வாக்குகளால், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பெற முடியும் என்றேன். அதற்கான விளக்கத்தை வழங்கினேன். மக்களிடம் நம்பிக்கையை வளர்த்தேன். எனது வெற்றிக்கான மூலதனம் அதுவாகவே இருந்தது”.
“தேர்தல் காலத்தில் பொத்துவிலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசும்போது, என்னை ‘சின்னப் பொடியன்’ என்றும், ‘கத்துக்குட்டி’ என்றும் நையாண்டி செய்தார். உள்ளுராட்சி சபையொன்றின் வாசல்படியைக்கூட மிதிக்காமல் நாடாளுமன்றத்துக்குச் செல்ல நான் ஆசைப்படுவதாக ஏளனம் செய்தார். ‘கனவு காண்பதற்கும் ஒரு அருகதை இருக்க வேண்டும்’ என்று, என்னை – மட்டம்தட்டிப் பேசினார். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, கோலியாத்தை வென்ற தாவீது போல், நடந்துமுடிந்த தேர்தல் களத்தில் நான் வெற்றி பெற்றுள்ளேன்” என்றார் முஷாரப்.
“கோலியாத்தை வெல்ல – தாவீதின் கைகளில் கவண் இருந்தது. உங்களிடம் என்ன இருந்தது” என்று கேட்டோம்.
“உண்மை” என்றார்.