ஜேர்மனிய போர்க்கப்பலான பேயர்ன் (Bayern) நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வந்தடையும் என்தோடு ஜனவரி 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 ஊழியர்களுடன் இந்தோ – பசிபிக் பகுதியில் ரோந்து மற்றும் பயிற்சிப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தக் கப்பல், அப்பகுதியில் ஆறு மாத காலப் பணியின் ஒரு பகுதியாக கொழும்பில் துறைமுகத்திற்கு வரவுள்ளது.
ஓகஸ்ட் 2021 இல் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்த போர்க்கப்பல் 2022 பெப்ரவரி இறுதியில் ஜேர்மனிக்கு திரும்பவுள்ளது.
ஜேர்மன் அரசாங்கத்தின் இந்தோ – பசிபிக் கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தோ – பசிபிக் ஒத்துழைப்புக்கான உத்தி ஆகியவற்றுடன் தொடர்புபட்டதாக இந்தக் கப்பலின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
குறித்த இரண்டு விடயங்களும், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபடுவதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை கட்டமைப்பை வழங்குகின்றன.
ஜேர்மன் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவது இலங்கையுடனான ஜேர்மனியின் இருதரப்பு உறவுகளின் சிறந்த தரத்தை நிரூபிப்பதாகவும், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஜேர்மனி தனது கால்தடத்தை விரிவுபடுத்துவதற்கான உறுதியை இந்த விஜயம் வெளிப்படுத்துவதாகவும் இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் சியுபெர்ட் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி அதன் இந்தோ – பசிபிக் கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் இந்தோ – பசிபிக் ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய வியூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிறுத்தப்படுவதற்கு முன்னர், வட கொரியாவிற்கு எதிரான ஐ.நா தடைகளை கண்காணிப்பதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்கொள்ளை எதிர்ப்பு பணியான அட்லாண்டாவிலும் பேயர்ன் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.
மேலும், முதன்முறையாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கடலில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.