இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99). இளவரசி எலிசபெத், ராணி ஆவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 1947-ம் ஆண்டு, நவம்பர் 20-ந்தேதி பிலிப் அவரை திருமணம் செய்து கொண்டார்.இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில், இளவரசராக நெடுங்காலம் சேவை ஆற்றியவர், இளவரசர் பிலிப். இவர் நேற்று மரணம் அடைந்தார்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டது. இளவரசர் பிலிப், வரும் ஜூன் மாதம் 10-ந் தேதி 100-வது பிறந்தநாள் கொண்டாடவிருந்த நிலையில், மரணம் அடைந்திருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.இதயக்கோளாறால் அவதிப்பட்டு, 28 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று, கடந்த மாதம் 16-ந்தேதி விண்ட்சார் கோட்டைக்கு இளவரசர் பிலிப் திரும்பி இருந்தார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இளவரசர் பிலிப் மறைவுச்செய்தி மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அவர் இங்கிலாந்திலும், காமன்வெல்த் நாடுகளிலும், உலகமெங்கும் பல தலைமுறையினரின் அன்பை பெற்றிருந்தார். அவர் எண்ணற்ற இளைஞர்களின் ஆதர்ச சக்தியாக விளங்கினார் என கூறி உள்ளார்.
இளவரசர் பிலிப் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், எடின்பர்க் கோமகன் இளவரசர் பிலிப் மறைவால் துயருறும் இங்கிலாந்து மக்கள் மற்றும் அரச குடும்பத்துடன் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. அவர் ராணுவத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றி உள்ளார். பல சமூக சேவைகளையும் முன்னின்று ஆற்றி உள்ளார். அவரது ஆன்மா அமைதி அடைவதாக என கூறி உள்ளார்.
இதேபோன்று தைவான் நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் சார்பில் டுவிட்டரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், எடின்பர்க் கோமகன் இளவரசர் பிலிப் மறைவுக்கு, இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், அரச குடும்பம், இங்கிலாந்து நாட்டு மக்கள் மற்றும் காமன்வெல்த்துக்கு தைவான் நாட்டு அரசும், மக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. அவரது ஆன்மா அமைதி அடைவதாக என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில், அமெரிக்க மக்கள் சார்பில் தங்களது இரங்கல்களை வெளியிட்டு உள்ளனர். தனது 99 ஆண்டு கால வாழ்வில், உலகத்தில் ஏற்பட்ட வியத்தகு மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட மாற்றங்களை கண்டவர். 2ம் உலக போரில் பணியாற்றி, 73 ஆண்டுகள் ராணியுடன் உற்ற துணையாக இருந்து, தனது முழு வாழ்வையும் பொது வாழ்க்கையின் மீது கண்ணாக இருந்து, இங்கிலாந்து மக்கள், காமன்வெல்த் மற்றும் அவரது குடும்பத்திற்காக மகிழ்ச்சியுடன் தன்னை அர்ப்பணித்தவர்.
இந்த தருணத்தில், இங்கிலாந்து ராணி மற்றும் இளவரசர் பிலிப்பின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்டோரை ஜில் மற்றும் நான் எங்களுடைய மனத்தில் இருத்தி வைத்துள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.