கொரோனா பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அறியக் கிடைத்துள்ளது. அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நற்பண்புகளை கொண்ட ஒருவரான மங்கள சமரவீரவின் இழப்பு எமக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.
சக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவையில் இணைந்து செயற்பட்ட காலத்திலும் அமரர் மங்கள சமரவீர இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தினை உணர்ந்து செயற்பட்டிருந்தார். அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கின்ற அவரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், காலம் தாமதிக்காமல் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமும், அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்படுகின்ற சமூக பாதுகாப்பு ஒழுங்குகளை இறுக்கமாக பின்பற்றவதன் மூலம் எதிர்கொண்டுள்ள பேரவலத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.