மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொரோனா பரவலை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் அந்த நாடு கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.
கடந்த 3 முறை நடைபெற்ற தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் நேற்றுமுன்தினம் 4-வது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.
கொரோனா அச்சம் காரணமாக குறைவான வாக்குகளே பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்தம் 87.5 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கின.
இதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேபோல் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிரான கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ராம் என்று அழைக்கப்படும் சிறிய அரபு கட்சி புதிய அரசை முடிவு செய்யும் கிங் மேக்கர் கட்சியாக உருவெடுத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ் யாருக்கு தனது ஆதரவை பெற இன்னும் அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர் எந்தக் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிக்காவிட்டால் இஸ்ரேல் 5-வது பொதுத்தேர்தலை சந்திக்க நேரிடும்.