தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று இணையவழியூடாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
தமிழ் பிரிவினைவாதம் நாட்டின் அரசியலமைபப்பிற்கு முரணாக செயற்பட்டதால் பாரிய விளைவுகள் நாட்டில் தோற்றம் பெற்றது.30 வருட கால யுத்தம் பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை நாட்டிலிருந்து இல்லாதொழித்தார்.
தமிழ் பிரிவினைவாதத்தை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இதன் விளைவை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் ஊடாக விளங்கிக் கொள்ள முடிந்தது.இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.இதற்காகவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள் என்றார்.