ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து

ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கி கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்த நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்து கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது கையெழுத்தான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

அதுமட்டும் இன்றி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது.மேலும் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை ஈரான் கட்டியது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

ஆனாலும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு திரும்பாமல் யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் புதிய மேம்பட்ட ஐ.ஆர்.6 ரக மையவிலக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது‌.

இந்தநிலையில் நேற்று நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.‌ இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது.‌எனினும் இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறினார்.

மேலும் ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறினார்.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த ஆலையில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து நேரிட்டதும், இதில் பல லட்சம் மதிப்புள்ள நவீன எந்திரங்கள் எரிந்து நாசமானதும், இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம் சாட்டியதும் நினைவு கூரத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *