சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. இந்த வைரசின் அடுத்தடுத்த அலைகளால் இன்றளவும் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது.
கொரோனா அறிகுறிகளைக் கொண்ட முதல் நோயாளி உகானில் 2019 டிசம்பர் 8 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரிவித்தது.இந்நிலையில், கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு முன்னரே, அதன் உகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக, அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்ற ஆய்வகத்தின் பல ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு அமெரிக்க உளவுத்துறை கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று குறித்து சீன அரசு தகவலை வெளியிடுவதற்கு முன்பாக, சீனாவின் உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியின் மூன்று ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அந்த ஆய்வகத்தில் இருந்த எத்தனை விஞ்ஞானிகள் பாதிக்கப்பட்டனர், தொற்று பரவிய நேரம் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க உளவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியே பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் மீண்டும் வலுத்துள்ளது.கொரோனா எப்படி பரவியது என உலக சுகாதார அமைப்பு அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ள நிலையில், இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.