கொவிட்-19 காரணமாக உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் ஓர் ஊடகவிய லாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது வைரஸ் பரவுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை குறித்து ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் வழங்கிய முறையையே அரசாங்கம் பின்பற்றுகிறது. நாட்டில் ஏற்படும் ஆபத்துகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன் மருத்துவத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய முறையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. நாங்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது என்றார்.
இதன்படி மருத்துவத்துறை அதிகாரிகள் அளிக்கும் முடிவுகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.