உண்ண உணவின்றி தவிக்கும் மக்கள்…

உண்ண உணவின்றி தவிக்கும் மக்கள்…

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அத்யாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆப்கான் தாலிபான்கள் வசம் சென்றுவிட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. உணவு, குடிநீர் கூட ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

உண்ண உணவின்றி தவிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை வீதியில் வைத்து விற்பனை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அதை வாங்க கூட ஆளில்லாத சூழலே நிலவுகிறது. வங்கிகளும் காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதுகிறது. இதுகுறித்து அங்குள்ள ஆப்கானிய மக்களில் ஒருவர் தெரிவித்ததாவது, 2 வாரங்களுக்கு முன் சந்தை நிலைமை சீராக இருந்தது. மக்களும் வாங்கும் சக்தியுடன் இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை சரியில்லை. யாரும் வாங்கும் சக்தியுடன் இல்லை. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எதையும் வாங்க முடியவில்லை.

வங்கிகள் மூடப்பட்டு சந்தையின் நிலைமையும் மோசமடைந்ததால், மக்கள் பொருளாதார பிரச்சனையில் உள்ளனர் என்று குறிப்பிட்டார். காபூல் விமான நிலையமும் மூடப்பட்டதால் ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை அருகே பாலைவனத்திலும், கரடுமுரடான மலைகளிலும் ஓய்வு எடுத்தவாறு நடந்து செல்லும் மக்கள், ஈரான் செல்லும் நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். கடும் வெயிலும் கொளுத்துவதால் அவர்களின் நிலை பரிதாபமாக காட்சியளிக்கிறது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *