உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலை தடுக்கத் தவறியது மோசமான குற்றம் -சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலை தடுக்கத் தவறியது மோசமான குற்றம் -சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் 32 பேர் நேரடியாக மனிதப் படுகொலையாளிகளாகவும் தாக்குதல்களை திட்டம் தீட்டியவர்களாகவும் குற்றஞ்சாட்டப்படவுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள 241 பேர் மீதும் வழக்கு தொடரப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுடன் தொடர்புடைய 273 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட எட்டு கோப்புகள் ஏற்கனவே சட்ட மாஅதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பிரகாரம் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் பல பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக அந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.குறிப்பாக தாக்குதலைத் தடுக்கத் தவறியது தொடர்பான குற்றச்சாட்டுகள் தீவிரமானவையென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.தாக்குதல்கள் தொடர்பாக 754 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு படாவிடின் விடுவிக்கப்பட்டவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் அறிக்கையையும், தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கையையும் ஆய்வு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *