மற்றவர்களை ஒற்றுமைப்படுத்தி விட்டு தங்களது தனித்துவத்தினை பேண வேண்டும் என்று நினைத்தால் அதில் வெற்றி பெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போது வடகிழக்கில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா என்பது குறித்து சிந்தித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தில் பிரச்சினை இருப்பதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.மாநகரசபை வரவு செலவு திட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து வாக்களிப்பார்கள் என்ற முடிவினை எட்டியுள்ளோம்.
இன்றைய அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மிக மோசமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டுவருகின்றது.இந்தநிலையில் தமிழர்களின் ஒற்றுமையென்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.
இன்று தமிழர்களின் பூர்வீக இடங்கள் பல்வேறு திட்டங்கள் என்ற பெயரில் அபகரிக்கும் சூழ்நிலையேற்பட்டுள்ளது.மகாவலி,தொல்பொருள்,வன இலாகா போன்ற திணைக்களங்களை வைத்துக்கொண்டு கபடத்தனமாக தமிழர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டு வருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டபாயவின் திட்டங்களை பார்க்கும்போது, தமிழர்களின் பூர்விக வரலாற்றினைக்கொண்ட வடகிழக்குப் பிரதேசத்தை அபகரிக்க மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொரோனா காலத்தில் இராணுவத்தின் பிரசன்னம்,நேர்முகத்தேர்வுகளின் போது இராணுவத்தினது பிரசன்னம்,அரச உயர் பதவிகளில் இராணுவ உயர் அதிகாரிகளை நியமிக்கும் நிலைமைகள்,முப்படைகளையும் கொண்டு ஆளும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
இந்த நிலையில் தமிழர்கள் பிரிந்து நின்று கட்சி ரீதியாக செயற்படுகின்றபோது அது இன்னும் இந்த அரசாங்கத்திற்கு பிரித்தாளும் தன்மையினையே ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று மட்டக்களப்பில் வியாழேந்திரன்,பிள்ளையான்,கருணா போன்றவர்கள் மட்டக்களப்பில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் பேசலாமே தவிர செயல்வடிவத்தில் எதனையும் செய்யமுடியாது. கூடுதலான வாக்குகளை தமிழ் மக்களிடம் இருந்து பெற்றவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியாத நிலையே உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் பெரும் பிரச்சினையாகவுள்ளது. அரசாங்கம் மிக மோசமான முறையில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேய்ச்சல் தரை பகுதிகளில் முன்னெடுத்துவருகின்றது.
இதனை தடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரிய தரப்பினருடன் பேசினோம். ஆனால் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அதற்கான சரியான தீர்மானத்தினை எடுக்கவில்லை. அரசாங்கத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது சரியான வேலைகளை செய்யவேண்டும்.
தமிழ் தேசியத்துடன் இருக்கும் கட்சிகள் உளப்பூர்வமாக மக்களின் உரிமைக்காக செயற்படும் கட்சிகளாக இருக்குமானால் ஒற்றுமையாக செயற்படவேண்டும்.
அரசாங்கத்துடன் இருப்பவர்களை நாங்கள் ஒன்றும் கூறமுடியாது. தமிழ் தேசியத்துடன் செயற்படும் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படும் காலம் தற்போது உருவாகியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமாகவிருந்தால் கொள்கையில் ஒன்றுபட்டுள்ள நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக ஒன்றுபடமுடியாது.
அவ்வாறான ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும். இன்று தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் கூடி முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் வடகிழக்கில் ஒன்றிணைந்து செயற்படும் இந்த காலத்தினை தவறவிடுவோமானால் தமிழர்களின் பூர்வீம் வரலாறு,தமிழர்களின் போராட்டம்,இறையாண்மை அத்தனையும் இழந்து எங்களையெல்லாம் வந்தேறு குடிகளாக மாற்றும் சிங்களத்தின் கருத்துகளுக்கு துணைபோனதாக அமையும்.