எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக

எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக

எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ராஜபக்ஷாக்கள் நாட்டுக்கு சாபம் ஆவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஏப்ரலில் தாய் நாடான அமெரிக்காவிற்கு சென்றிருந்த பஷில் ராஜபக்ஷ தற்போது சுற்று பயணமாக நாடு திரும்பியுள்ளார். அவர் தாய் நாடு செல்ல முன்னர் இலங்கையில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராகக் காணப்பட்டார். ஆனால் எவ்வித நிதி முகாமைத்துவமும் இன்றி நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிக்கு பஷில் ராஜபக்ஷ நிச்சயம் பொறுப்பு கூற வேண்டும்.

எனவே தற்போது அவருக்கு நிதி அமைச்சு மாத்திரமல்ல, எந்த அமைச்சை வழங்கினாலும் அவரால் எதையும் செய்ய முடியாது. அமைச்சு பதவியை வழங்கி 3 மாதங்களுக்குள் அதனை கண்டுகொள்ளலாம். பஷில் மாத்திரமல்ல,எந்தவொரு ராஜபக்ஷவுக்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று நாம் ஏற்கனவே கூறினோம்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது யுத்த வெற்றியை பெரிதாக பிரசாரம் செய்து அவர் அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து விடுவார் என்று கூறினார்கள். அவரின் தோல்வியை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷவே அவரின் பின்னாலிருந்து யுத்தத்தை நிறைவு செய்ததாக கூறினார்கள். தற்போது அவரும் தோல்வியடைந்துள்ளதால் பஷில் ராஜபக்ஷவைக் கூறுகின்றனர்.எதிர்வரும் 3 வருடங்களில் நாமல் ராஜபக்ஷதான் தேர்தல் வெற்றிக்கு காரணம் என்று கூறுவார்கள்.

ஆனால் எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ராஜபக்ஷாக்கள் நாட்டுக்கு சாபம் ஆவர். அதனால் தான் அவர்களுக்கு எதிராக நாட்டின் சகல திசைகளிலிருந்தும் எதிர்ப்புகாற்று உருவாகிக் கொண்டிருக்கிறது. இவை ஒன்றிணைந்து மக்கள் மத்தியில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும். ராஜபக்ஷாக்களுக்கு எதிரான இந்த அரசியல் சூறாவளிக்கு தலைமை வகிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். கோட்டாபய ராஜபக்ஷவை தொடர்ந்தும் யார் நாட்டின் தலைவர் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என மேலும் அவர் தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *