மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த ஒரு வாரமாகவே சீற்றத்துடன் காணப்பட்ட நைராகோங்கோ எரிமலை நேற்று முன்தினம் இரவு திடீரென வெடித்து சிதறியது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் காணாமல் போய் உள்ளார்கள்.எரிமலையைச் சுற்றியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். எரிமலையிலிருந்து லாவா தீப்பிழம்புகள் நூறு மீட்டர் தூரத்திற்கு வழிந்தோடின.
இதுதொடர்பாக, அரசாங்க செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் முயாயா கூறுகையில், தப்பி ஓட முயன்றபோது 9 பேர் கார் விபத்தில் பலியானார்கள். சிறையில் இருந்து தப்பிக்க முயன்றபோது 4 பேர் இறந்தனர், 2 பேர் தீக்காயங்களால் இறந்தனர் என்று தெரிவித்தார்.சனிக்கிழமையன்று அருகிலுள்ள நகரமான கோமாவில் மக்கள் பயந்து தப்பி ஓடியதால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், குழந்தைகள் மாயமானதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.மேலும், 170 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போய் உள்ளார்கள் எனவும் அஞ்சப்படுகிறது.