இன்று ஜனவரி மாதம் 6ம் திகதி அமெரிக்காவின் தலைநகரத்தில் அமைந்துள்ள கொங்கிரஸ் (Congress) கட்டிடத்தினுள் எலெக்ரோரல் கொலிச்சால் (Electoral College) அனுப்பப்பட்ட ஜனாதிபதித் தெரிவுப் பத்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக இரு சபைகளும் ஒன்றுகூடியது. தற்போதைய உப ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) தலைமையில் பத்திரம் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு, அரிசோனா மாநில எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டபோது அதற்கு பிரதிநிதிகள் சபையிலிருந்தும் செனற்சபையிலிருந்தும் எதிர்ப்பு பிரேரணை கொண்டுவரப்பட்டு ஆமோதிக்கப்பட்டபடியால் இரண்டு சபைகளும் பிரிந்து சென்று தனித்தனியாக விவாதம் ஆரம்பித்தது.
விவாதங்கள் முடியும் தருவாயில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தடுப்பை மீறி கட்டிடத்தினுள் புகுந்ததினால் குழப்பம் ஏற்பட்டதினால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டு சபை அங்கத்தவர்கள் பாதுகாப்பாக நிலக்கீழ் அறைகளுக்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டனர். காலவரையின்றி கூட்டம் நிறுத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். தலைநகரம் மிகவும் பதட்டமான நிலையில் உள்ளது.
நடப்பதெல்லாம் அமெரிக்காவுக்கும் உலகநாடுகளுக்கும் ஒரு பாடமாக அமைவதோடு சரித்திரத்தில் ஒரு முக்கிய நாளாக அமையப் போகின்றது.