கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப் சனலில் ரோயல் ரெய்மெண்ட்டிற்கு மிக நீண்ட நேர்காணலை வழங்கியிருந்தார்.நேர்காணலில் அவர் பல விடயங்களைப் பற்றியும் கதைக்கிறார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார்….”இலங்கை ஒரு சிறிய நாடு அதன் பொருளாதாரமும் சிறியது ஆனால் அதன் அமைவிடம் காரணமாக அதற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை கருதிக்கூறின் அது ஒரு பெரிய நாடு”என்று.
அதுதான் உண்மை.இந்துமகா சமுத்திரத்தில் இலங்கைத் தீவின் அமைவிடம்தான் அதன் பலம்.அதேசமயம் அதுதான் அதன் துயரமும்.இது சிங்கள மக்களுக்கும் பொருந்தும் தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் எல்லா துயரங்களுக்கும் ஊற்று மூலம் அதுதான். இனிமேல் சிங்கள மக்களின் எல்லா துயரங்களுக்கும் அதுவே ஊற்று மூலமாக அமைந்து விடுமா?
சீனாவின் பட்டியும் பாதையும் என்றழைக்கப்படும் உலகளாவிய வியூகத்தின்படியும் இலங்கைத் தீவுக்கு மிகப்பெரிய கேந்திர முக்கியத்துவம் உண்டு.அதுபோலவே பட்டியும் பாதையும் திட்டத்துக்கு எதிரான அமெரிக்காவின் இந்தோ பசிபிக் மூலோபாய திட்டத்தின்படியும் இலங்கைத் தீவுக்கு மிகப்பெரிய கேந்திர முக்கியத்துவம் உண்டு. அதாவது பூமியில் உள்ள மூன்று பெரிய பேரரசுகளின் இழுவிசைகளுக்குள் சிறிய இலங்கைத் தீவு சிக்கியிருக்கிறது என்று பொருள். இதனை தமது பேர பலமாக பயன்படுத்தி இதுவரையிலும் இருந்த எல்லா இலங்கை அரசாங்கங்களும் தமிழ் மக்களை ஒடுக்கின;ஜெனிவாவை எதிர்கொண்டன.இம்முறையும் ஜெனிவாவை எதிர்கொள்வதற்கு அப்படியொரு வியூகத்தைத்தான் ராஜபக்சக்களும் வகுத்து வைத்திருப்பதாக தெரிகிறது.
ஜெனிவா எனப்படுவது இனப்பிரச்சினையின் நீட்சியே.இன முரண்பாடுகளின் விளைவாகத் தோன்றிய போரில் வெற்றி கொள்வதற்கு ராஜபக்சக்கள் கையாண்ட வழிமுறைகளின் விளைவே ஜெனிவா.எனவே ஜெனிவா இனப்பிரச்சினையின் 2009க்குப் பின்னரான நீட்சி எனலாம். இந்த அடிப்படையில் பார்த்தால் இனப்பிரச்சினையை எதிர்கொள்வதற்கு எப்படிப்பட்ட ஒரு வியூகத்தை இலங்கை அரசாங்கங்கள் வகுத்தனவோ அப்படிப்பட்ட ஒரு வியூகத்தைத்தான் இப்போதிருக்கும் ராஜபக்ச அரசாங்கமும் வகுக்க போகின்றதா?
அட்மிரல் ஜெயந்த கொலம்பகே கூறுவதுபோல தனது கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து அதை ஒரு பேரபலமாக அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இப்போதிருக்கும் அரசாங்கத்தின் இரண்டு பெரிய பலங்களாவன முதலாவது உள்நாட்டில் யுத்த வெற்றி. இரண்டாவது பிராந்தியத்திலும் பூகோள அளவிலும் சீனாவுக்கு நெருக்கமாக இருப்பது. இதன் காரணமாக உள்நாட்டில் அவர்கள் தொடர்ச்சியாக சிங்கள பௌத்த பெருந்தேசியவாத உணர்வுகளுக்கு தலைமைதாங்கி தேர்தல் வெற்றிகளை குவித்து வருகிறார்கள். இந்த மக்கள் ஆணையை வைத்துக்கொண்டு வெளி உலகத்துக்கு வகுப்பு எடுக்கிறார்கள். அதேசமயம் சீனாவை நெருங்கி செல்வதன்மூலம் தமது பேர பலத்தை அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.அவர்கள் மேலும் சீனாவை நோக்கி நெருங்கி செல்வதைக் குறைக்க அவர்கள்மீது அதிகரித்த அழுத்தங்களை பிரயோகிக்க முடியாத ஒரு நிலைக்கு இந்தியாவையும் அமெரிக்காவையும் தள்ளிவிட்டிருக்கிறார்களா?
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட யூடியூப் நேர்காணலில் அட்மிரல் ஜெயந்த ஒரு விடயத்தை திரும்பத் திரும்ப கூறுகிறார்,இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை மீறி இலங்கை எந்த ஒரு முடிவையும் எடுக்காது என்று. ஆனால் கடந்த ஓராண்டு கால நடைமுறை அப்படிப்பட்டது அல்ல. இந்தியா தொடர்பில் ஜெயந்த கொலம்பகேயும் ராஜபக்சக்களும் வார்த்தைகளால் இந்தியாவுக்கு அபிஷேகம் செய்கிறார்களே தவிர நடைமுறையில் அவர்கள் சீனாவை நெருங்கிச் சென்று தமது பேரத்தை அதிகப்படுத்துகிறார்கள் என்பதே சரி.கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்திலும் யாழ்ப்பாண தீவுகளில் மின் ஆலை அமைக்கும் விடயத்திலும் அவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லை என்பதை கண்டுபிடிப்பதற்கு பெரிய அரசறிவியல் அறிவு தேவையில்லை. எனினும் ஜெனீவாவில் இம்முறை இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விடும் வாய்ப்புக்களே அதிகம் என்ற ஊக்கங்கள் உண்டு.
ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் தனது பேரபலம் சீனா என்று நம்புகின்றது.ஏனெனில் ஜெனிவா கூட்டத் தொடருக்குப் பல மாதங்களுக்கு முன்னரே சீனா தான் இலங்கை அரசாங்கத்தை ஜெனிவாவில் பாதுகாக்க போவதாக பகிரங்கமாக அறிவித்து விட்டது. அதாவது எனவே சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவை நம்பி இலங்கை அரசாங்கம் ஜெனீவாவுக்கான தனக்கு வியூகத்தை வகுக்க போகின்றதா? என்ற கேள்வி இங்கு முக்கியம்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட அந்த நேர்காணலில் அட்மிரல் கொலம்பகே மேலும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகிறார் முன்னைய அரசாங்கம் உருவாக்கிய நிலைமாறுகால நீதிக்கான கட்டமைப்புக்கள் சிலவற்றை தாங்கள் தொடர்ந்தும் நிர்வகிக்கின்றோம்; அவற்றை பலப்படுத்த போகிறோம்; அவற்றிற்கு வேண்டிய நிதியை வழங்கப் போகிறோம்;அந்த கட்டமைப்புகளுக்கான இந்த ஆண்டுக்குரிய செயல்திட்டத்தை உருவாக்குமாறு கேட்டிருக்கிறோம் என்றெல்லாம் கூறுகிறார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம்-ஓ.எம்.பி-,இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம்,சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான அலுவலகம் போன்றவற்றை தொடர்ந்தும் இயக்குவதற்கு அரசாங்கம் தயார் என்ற செய்தி அந்த நேர்காணலில் உண்டு.இது நிலைமாறுகால நீதி தொடர்பில் ஒரு உள்நாட்டு வடிவத்தை,அதை இன்னும் தெளிவாகச் சொன்னால் ராஜபக்ச பாணியிலான ஒரு உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு அவர்கள் தயார் என்ற செய்தி அதில் உண்டு.ஆனால் அந்த அலுவலகங்களை பாதிக்கபட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தவிர அவ்வலுவலகங்களுக்கு போதிய வளங்கள் இல்லை.ஓ.எம்.பிக்கு வாகனங்களே இல்லை.இழப்பீட்டு நீதிகான அலுவலகத்துக்கு ஒரு வாகனம்தான் உண்டு.இவ்வலுவலகங்கள் புதிய அலுவர்களை இணைக்க முடியாது.ஐநா;ஐ.சி.ஆர்.சி போன்றவற்றிடம் இருந்து துறைசார் ஒத்துழைப்பைப் பெற முடியாது என்பதே உண்மை நிலையாகும்.எனவே ஒருபுறம் முன்னைய தீர்மானங்களின் விளைவாக உருவாக்கப்பட்ட சில கட்டமைப்புகளை தொடர்ந்தும் அவற்றின் செயலற்ற நிலையில் பேணிக்கொண்டு இன்னொருபுறம் சீனாவுடனான பேரபலத்தை வைத்துக்கொண்டு நிலைமைகளை கையாளலாம் என்று அவர்கள் நம்புகிறார்களா?
இப்படிப்பட்டதொரு பின்னணியில்தான் இம்முறை ஜெனிவாக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட இருக்கும் ஐநா தீர்மானத்தின் பூச்சிய வரைபு வெளிவந்திருக்கிறது.இந்த வரைபு தமிழ் மக்களைப் பொருத்தவரை அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாத ஒரு வரைபு.அண்மையில் மூன்று தமிழ் கட்சிகளும் சிவில் சமூகங்களும் ஒன்றிணைந்து ஜெனிவாவுக்கு அனுப்பிய கோரிக்கைகளை ஐநா கவனத்தில் எடுக்கவில்லை என்பதைத்தான் பூச்சிய வரைவு காட்டுகிறது.அதைவிடக் குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைக்கும் இந்த முதல்வரைபுக்கும் இடையே பாரதூரமான இடைவெளிகள் உண்டு.
ஆனால் இது ஆச்சரியப்படத்தக்க அல்லது எதிர்பாராத ஒரு இடைவெளி அல்ல.இதற்கு முன்னரும் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைகளுக்கும் ஐநா தீர்மானங்களுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்பட்டன.அதுமட்டுமல்ல ஐநாவின் சிறப்பு தூதுவர்களின் அறிக்கைகளுக்கும் அய்நா தீர்மானங்களுக்கும் இடையில் கூட இடைவெளிகள் உண்டு. ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைகள் பெரும்பாலும் துறைசார் நிபுணர்களால் தொகுக்கப்படுகின்றன. சிறப்புத் தூதுவர்களும் அவ்வாறு துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களே.எனவே துறைசார் நிபுணத்துவம் ஊடாக தொகுக்கப்படும் அறிக்கைகள் பெருமளவுக்கு உண்மைக்கு கிட்டவாக வருகின்றன.ஆனால் ஐநா தீர்மானங்கள் அவ்வாறு அல்ல.எல்லா ஐநா தீர்மானங்களும் அரசுகளின் தீர்மானங்களே.அவை அரசுக்கும்-அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான ராணுவ பொருளாதார நலன்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஐநா எனப்படுவது அரசுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கிய ஒரு கட்டமைப்புத்தான். எனவே ஐநா தீர்மானங்களுக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைகளுக்கும் இடையே இடைவெளிகள் இருக்கும்.இந்த இடைவெளியை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இடைவெளிக்குள் தான் தமிழ் மக்கள் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
வரவிருக்கும் தீர்மானத்துக்கான முதல் வரைபு மென்மையான பொத்தாம் பொதுவான வார்த்தைகளால் எழுதப்பட்டிருக்கிறது. பொதுவாக தீர்மானத்தின் முதல் வரைபுகள் அவ்வாறுதான் அமையும் என்று கூறப்படுகிறது. அரசுகளின் அரங்கான மனித உரிமைகள் பேரவையில் ஓர் அரசு குறித்து நிறைவேற்றப்படும் தீர்மானத்தை உருவாக்கும் பொழுது முதல் வரைபில் அரசுகளுக்கு நோகாத விதத்திலேயே வார்த்தைகள் உள்ளடக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.பின்னர் படிப்படியாக உறுப்பு நாடுகளோடு கலந்துரையாடி அவற்றின் அறிவுறுத்தலுக்கு அமைய தீர்மானம் கடுமையாக்கப்படலாம் என்றும் ஒரு கருத்தும் உண்டு. ஆனால் இதை இப்படி எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது ஐநா தீர்மானம் அரசாங்கத்தை தண்டிக்கக் கோரும் ஒன்றாக அமையும் என்றோ அல்லது தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும் என்றோ மாயைகளைக் கட்டியெழுப்பத் தயாரில்லை.
ஐநாவைப் பொறுத்தவரை இப்பொழுது ஜெனிவாவில் உள்ள சவால் உண்மையான என்னவென்றால் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பது அல்ல.மாறாக ஏற்கனவே சீனாவை நோக்கி சாய்ந்திருக்கும் அரசாங்கம் இதற்கு மேலும் சீனாவை நோக்கி போகக் கூடிய விதத்தில் நெருக்கடிகளை கொடுக்காமல் அரசாங்கத்தை எப்படிக் கையாளுவது என்பது தான்.ஐநா தீர்மானம் இந்த அடிப்படையில்தான் வெளிவருமா?
ஆனால் இந்த இடத்தில் தமிழ் மக்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். இந்து மகா சமுத்திரத்தில் எதைத் தமது பேரபலமாக சிங்கள மக்கள் பயன்படுத்தி வருகிறார்களோ அதையே தமிழ் மக்களும் தமது பேரபலமாகப் பயன்படுத்தலாம்.சிங்கள மக்களுக்கு உள்ள அதே கேந்திர முக்கியத்துவம் தமிழ் மக்களுக்கும் உண்டு.ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவம் சிங்கள மக்களுக்கு பேரபலம் ஆகவும் தமிழ் மக்களுக்கு துயரத்தின் ஊற்றாகவும் ஏன் மாறியது? என்ற கேள்விக்கு தமிழ் மக்கள் பொருத்தமான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நிலாந்தன்