ஐ.நாவின் புதிய பிரேரணை குறித்து ஜெய்சங்கருடன் கூட்டமைப்பு பேசும் – சம்பந்தன் தெரிவிப்பு

ஐ.நாவின் புதிய பிரேரணை குறித்து ஜெய்சங்கருடன் கூட்டமைப்பு பேசும் – சம்பந்தன் தெரிவிப்பு

இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய பிரேரணை, ஜெனிவா விவகாரத்தில் தற்போதைய அரசின் அசமந்தப்போக்கு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பேச்சு நடத்தும்.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று (05) இலங்கை வருகின்றார். இதன்போது அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

தம்மை ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளமையை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்படி விடயத்தையும் தெரிவித்தார்.

இலங்கையில் சீனத் தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் டோவல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்தநிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் திடீர் பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார்.

மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையிலும், மாகாண சபை முறைமைக்கு எதிராக ராஜபக்ச அரசிலுள்ள அமைச்சர்கள் சிலரும், கடும்போக்குவாத பௌத்த தேரர்களும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையிலும் ஜெய்சங்கரின் இலங்கைக்கான பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான வருகையை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் ‘ருவிட்டர்’ பதிவில்,வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இன்று (05) விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், எதிர்வரும் 07ஆம் திகதி வரை இலங்கையில் பல்வேறுமட்டப் பேச்சுகளிலும் ஈடுபடவுள்ளார் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *