போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தின் போது குறித்த விடயத்தினை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவனால் விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளை மனித உரிமை என்று சொல்கிறோம்.
மனிதன் ஒவ்வொருவனும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் பத்தாம் திகதி உலக மனித உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் 53 நாடுகள் அங்கம் பெற்றன.
முதல் பணியாக சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தக் குழு முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது.
இந்தப் பிரகடனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் 58 நாடுகள் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950 ஆம் ஆண்டு முதல் உலக சர்வதேச மனித உரிமை நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லா தரப்பினரிடமும் வலியுறுத்துவதே மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம்.
உலகில் உள்ள எல்லா மனிதர்களும் சமமானவர்களே எல்லாருக்கும் சம உரிமை உண்டு மற்றவர்களிடம் இருந்து நாம் என்ன உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை அவர்களுக்கும் நாம் தர வேண்டும் யாரையும் யாரும் அடிமைப்படுத்தக் கூடாது.
மனிதனின் கௌரவத்தையும் அவனின் பிரிக்க முடியாத உரிமைகளை அறிந்து ஏற்றுக்கொள்வதே அவனுக்கு அழிக்கும் சுதந்திரம், நீதி, சமாதானத்தின் அடித்தளம் என்று சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல யாராலும் யாருக்கும் வழங்கப்பட்டதும் அல்ல ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் அவனிடம் பிறந்ததுதான் மனித உரிமை. அதனால் ஒருவரின் உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என இங்கு வாழும் தமிர்கள் கொன்று குவிக்கப்பட்ட இடமாக இலங்கை நாடு விளங்குகிறது.
போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம்.
எனவே இலங்கை தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டலில் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பின் வழி அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.
(1) இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் புலம் பெயர் தமிழர்கள் ஆகியோர் வாக்கெடுப்பில் அனுமதிக்கப்பட வேண்டும்.
(2) இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்த சுயேச்சையான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும்
(3) இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலத்திலிருந்து இலங்கை இராணுவப் படைகள், சிங்கள நில ஆக்கிரமிப்பாளர்களை இலங்கை அரசு உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும்.
(4) தீவிரவாத நடப்பு சட்டம், பல்வேறு பாதுகாப்பு சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
(5) இலங்கையில் நடந்தது தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு நடவடிக்கைதான்
(6) இலங்கைக்கான விசேட ஐ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும், வடக்கு-கிழக்கு நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேன்படுத்தவும், உறுதுணையாகவும் இருக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு- கிழக்கில் நிறுவ வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படுதல், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி விசாரணை செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்யவேண்டும் ,
நீர் இல்லாமல் மீன்கள் இறந்துவிடுவது போல, சட்டமும் ஒழுங்கும் இல்லாத சமூகத்தில் உரிமைகள் இல்லாமல் மனிதன் இறந்து விடுகின்றான். எனவே “சமாதானத்தை விட உரிமைகளே பெறுமதியானவை” என்று அமெரிக்க ஜனாதிபதியான வூற்றோ வில்சன் சொன்னதை இன்று மீண்டும் நினைவூட்டி இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு நீதி காணப்படவேண்டும்“ எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.