ஜனாதிபதி ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.செயலணியைஉருவாக்குவது குறித்து என்னுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை எனக்கு இது குறித்து மகிழ்ச்சியில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை செயலணியில் இடம்பெற்றுள்ள முஸ்லீம் உறுப்பினர்கள் எவருக்கும் அந்த செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என்பது தெரியாது என தகவல் வெளியாகியுள்ளது. தன்னை குறிப்பிட்ட செயலணிக்கு நியமித்திருப்பது குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் கலீல் ரஹ்மான் ஊடகங்கள் மூலமாகவே அது தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அவர் அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும் என அவரது கட்சி தலைமை தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.