ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு. முதல் உலகப் போர் சமயத்தில் ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக நாட்டில் பல புரட்சி இயக்கங்கள் உருவாகின. இதன் பின்னணியில் ஆர்மீனியார்கள் இருப்பதை கண்டு கொண்ட ஓட்டோமான் பேரரசு 1915-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி ஆர்மீனியார்களை படுகொலை செய்யத் தொடங்கியது. 1915 – 1916-ம் ஆண்டுகளில் 15 லட்சம் ஆர்மீனியார்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய ஆர்மீனியா உட்பட பல நாடுகள் இதை இனப்படுகொலை என கூறுகின்றன. ஆனால் ஓட்டோமான் பேரரசுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கி குடியரசு இதனை இனப்படுகொலை என கூறுவதை மறுக்கிறது. மேலும் 1915 – 1916-ம் ஆண்டுகளில் 3 லட்சம் ஆர்மீனியார்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறி வருகிறது.
இந்த நிலையில் ஓட்டோமான் பேரரசு காலத்தில் ஆர்மீனியார்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஓட்டோமான் பேரரசின் படுகொலையை இனப்படுகொலை என அறிவித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் இதுகுறித்துக் கூறுகையில் ‘‘ஒட்டோமான் கால ஆர்மீனியா இனப்படுகொலையில் இறந்த அனைவரின் வாழ்க்கையையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம், மேலும் இதுபோன்ற ஒரு கொடுமை மீண்டும் நிகழாமல் தடுக்க நம்மை மறுபரிசீலனை செய்கிறோம். இனப்படுகொலை என அறிவிப்பதின் நோக்கம், குற்றம் சாட்டுவது அல்ல, என்ன நடந்ததோ அது மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி செய்வதாகும்’’ என்றார்.இதனிடையே அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது துருக்கி அரசு.