முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த நூலில் அவர் இலங்கைத் தீவில் இடம்பெற்றது ethnic slaughter அதாவது இன சங்காரம் என்று கூறியிருக்கிறார். ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவர் இனப்படுகொலை என்று அதை அழைத்திருப்பதாக்க கருதுவது தெரிகிறது. ஆனால் அது இனப்படுகொலை என்ற அரசியல் அடர்த்தி மிக்க ஒரு வார்த்தயை விட செறிவு குறைந்த வார்த்தைதான். சங்காரம் என்பது தொகையாக உயிர்களை அழிப்பது. அதன் வேர்ச்சொல் பழைய நோர்வீஜிய மொழியிலிருந்து வருகிறது. அதன் பொருள் இறைச்சிக்கடை அல்லது யுத்த களத்தில் தொகையாகப் பொது மக்களைக் கொல்வது என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் அரசியல் அகராதியில் இனப்படுகொலை என்ற வார்த்தை அதை விட அடர்த்தியான அர்த்தங்களைக் கொண்டது. எனவே இது விடயத்தில் இனப்படுகொலை என்ற முதல் நிலை சொல்லைப் பயன்படுத்தாமல் அதைவிட அரசியல் அடர்த்தி குறைந்த ஒரு சொல்லை ஒபாமா பயன்படுத்தியிருக்கிறார் இந்த சொற் தெரிவிற்குள்ளும் ஒரு செய்தி இருக்கிறது. இது முதலாவது.
இரண்டாவது ஒபாமா உலகப் பேரரசு ஒன்றின் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு தலைவராக இருந்தவர். அவருடைய காலத்தில்தான் 2009 மே வந்தது. அவருடைய காலத்தில்தான் போரில் ஈடுபட்ட மக்களை காப்பாற்றுவதற்கு ஒரு மேற்கு நாடு முயற்சித்தது என்று பொதுவாகக் கருதப்பட்டது.அவருடைய காலத்தில்தான் வணங்காமண் கப்பல் வரும் என்று அல்லது. ஐ.நா வரும் என்று நம்பி போர்க்களத்தில் சிக்குண்டிருந்த ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்போடு கடலைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆனால் எதுவும் வரவில்லை.
நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு பெரும் தலைவராக இருந்த காலகட்டத்தில் அந்த அநீதியைத் தடுக்காத ஒபாமா ஏன் இப்பொழுது அதை சுட்டிக்காட்ட வேண்டும் ? அதிலும் குறிப்பாக பழியைப் பெருமளவுக்கு ஐநாவை நோக்கித் திருப்ப காரணம் என்ன? ஐ.நா. ஏற்கனவே கிழக்ரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் தொல்வியுற்றிருந்த ஒரு பின்னணியில் ஐ.நாவின் மீது அமெரிக்க முன்னாள் அதிபர் பழியைப் போடக்காரணம் என்ன? அநீதி நடக்கும் பொழுது தான் அதிகாரத்தில் இருந்தது அவருக்கு குற்ற உணர்ச்சியைத் தருகிறதா? தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதைத் தடுக்க முடியவில்லை என்பது அவரைப் பொறுத்தவரை குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. எனவே குற்ற உணர்ச்சி காரணமாகத்தான் அவர் இப்பொழுது அதாவது ஓய்வு பெற்ற பின்னாவது அந்த உண்மையை ஒப்புக் கொள்கிறாரா?
அவர் அவ்வாறு தெரிவித்திருப்பது அதன் முதல் நிலை அர்த்தத்தில் ஈழத்தமிழர்களுக்கு சாதகமானது. ஆனால் அது ஒரு முன்னாள் அதிபரின் அபிப்பிராயம்தான். அதை ஒரு அரசியல் தீர்மானமாக மாற்ற வேண்டும். அங்கேதான் ஈழத்தமிழர்கள் அரசியல் செய்ய வேண்டும்.
ஒபாமா மட்டுமல்ல இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிற்றும் அவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவருடைய “அசைன்மென்ட் கொழும்பு” என்ற நூலில் அவர் ஓரிடத்தில் “மிய குல்பா” எனப்படும் ஒரு லத்தீன் வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். அது கிறீஸ்தவர்கள் பாவ மன்னிப்பில் கூறுவது.
டிக்சிட் கொழும்பில் இந்திய தூதுவராக இருந்தவர். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இந்திய அமைதிகாக்கும் படைக்கும் இடையிலான மோதல் காலகட்டத்தில் அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு விவகாரத்தை தெளிவுபடுத்தும் பொறுப்பில் அவர் இருந்தார். ஆனால் ஓய்வு பெற்ற பின்னர் தான் அவர் மியா குல்பா என்று சொன்னார்.
அவரைப்போலவே மற்றொருவர் முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்.2014ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட நூலில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.சிறிலங்காவின் அவலம் என்ற அத்தியாயத்தை அவர் பின்வருமாறு முடிக்கிறார்.‘‘மிகத் தொடக்கத்திலிருந்தே இலங்கை இனப்பிரச்சினை மிகத் தவறாகக் கையாளப்பட்டதுடன் அது முழு அளவிலான ஒரு தோல்வியாகவும் முடிவடைந்தது…”நட்வர்சிங் பழியை ராஜீவ் காந்தி மீது போடுகிறார்.இக்கருத்துக்கள் ஈழத் தமிழர்களின் அபிலாசைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை நிரூபிக்க உதவும். நட்வர்சிங்கின் நூல் வெளிவந்த காலகட்டத்தில் அதைக் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். “ஓய்வூதியர்கள் பெற்ற ஞானம்” என்று.
இப்பொழுது ஒபாமா கூறுகிறார் நடந்தது இன சங்காரம் என்று. மேற்கண்ட மூவரும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள். ஆனால் அவர்களுடைய பதவிக் காலங்களில் இனப்பிரச்சினையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. நடப்பது அநீதி என்று தெரிந்திருந்தும் ஏன் அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை? அல்லது அதற்கெதிராக அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு தாம் சார்ந்த அரசுக் கட்டமைப்பின் மீது செல்வாக்குச் செலுத்த முடியவில்லை?
விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள் இது விடயத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுவார்கள். ஈழத்தமிழர்களின் போராட்டம் நீதியானது என்றாலும் போராடிய விதம் அதன் நீதியை குறைத்து விட்டது என்றும் இதனால் ஈழத்தமிழர் விவகாரத்தை கையாள்வதில் வெளித் தரப்புக்களுக்கு வரையறைகள் இருந்தன என்றும். ஆயின், கடந்த 11 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கம் அரங்கில் இல்லை. எனினும் இனப்பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை?
எனவே இங்கு பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களின் போராட்டம் நீதியானதா இல்லையா என்பதல்ல. உலகப் பேரரசுகளும் பக்கத்து பேரரசும் அப்போராட்டத்தை குறித்து நீதி நியாயங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவில்லை என்பதுதான். ஏனெனில் அரசியல் தீர்மானங்கள் நீதி நியாயங்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. அதிகபட்சம் நலன்சார் நோக்கு நிலைகளில் இருந்தே எடுக்கப்படுகின்றன. பாதுகாப்பு பொருளாதாரம் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அந்த முடிவுகள் பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன. எனவே ஒரு மக்கள் கூட்டம் தொடர்பான வெளியரசுகளின் முடிவுகள் நீதி நியாயத்தின் அடிப்படையிலானவையாக இருக்க வேண்டும் என்றில்லை. மாறாக அவை பெருமளவுக்கு நலன்சார் உறவுகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. இதை ஈழத் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தப் பூமியின் அச்சு நீதியின் மையத்தில் சுற்றவில்லை. ஈழத் தமிழர்களின் தலையிலும் சுற்றவில்லை. அரசியலில் நீதி நியாயங்களை விடவும் நலன்களே முக்கியம். உன்னதமான இலட்சியங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே பாரதூரமான இடைவெளிகள் இருக்கும்.
ஒரு மக்கள் கூட்டம் நீதிக்காக போராடுகிறது என்பதோ அல்லது நீதியாகப் போராடுகிறது என்பதோ அந்தப் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிப்பதில்லை. மாறாக அந்தப் போராட்டம் பிராந்திய நலன்களுக்கு பொருத்தமானதா என்பதே அதன் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஒரு போராட்டத்தில் ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவு தியாகத்தைச் செய்கிறது என்பதும் எவ்வளவு வீரமாக போராடுகிறது என்பதும் அப்போராட்டத்தின் இறுதி வெற்றியை தீர்மானிப்பதில்லை. மாறாக அந்தப் போராட்டத்துக்கும் வெளித் தரப்புகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய நலன்சார் உறவுகளே இறுதி வெற்றியை தீர்மானிக்கின்றன.
அதாவது மேற்கண்டவற்றைத் தொகுத்தால் ஒரு விடயம் கூர்மையாக வெளிப்படுகிறது. அது என்னவெனில் ஈழத் தமிழர்களின் போராட்டம் நீதியானதா? அல்லது அதற்காக அவர்கள் நீதியாகப் போராடினார்களா ? என்பவையெல்லாம் அப்போராட்டத்தில் இறுதி முடிவைத் தீர்மானிக்கவில்லை. மாறாக முழுக்க முழுக்க நலன்சார் உறவுகளே இதுவிடயத்தில் முடிவுகளை எடுக்கின்றன.
எனவே ஓய்வு பெற்றவர்களின் நீதி ஈழத் தமிழர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கலாம். ஆனால் ஓய்வு பெற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்கள் சார்ந்திருந்த அரசுக் கட்டமைப்பின் உத்தியோக பூர்வ கொள்கை முடிவுகளாக அரசியல் தீர்மானங்களாக மாற்றப்பட வேண்டும். புதிய அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஒபாவாவின் வாரிசு. ஒபாமாவாவின் செல்வாக்கு அவரிலுண்டு. எனவே ஒபாமாவுக்கூடாக ஈழத் தமிழர்கள் தொடர்பான அமெரிக்காவின் உத்தியோக பூர்வ நிலைபாடுகளில் எப்படிச் செல்வாக்குச் செலுத்துவது என்று ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டும். “ஒபாமாவுகான தமிழர் அமைப்பு” “ஜோ பைடனுகான தமிழர் அமைப்பு” போன்றவை ராஜீயச் செல்வாக்கு மிக்க அமைப்புகளா? ஒபாமாவுகான தமிழர் அமைப்பு எனப்படுவது ஒரு தனிநபரின் முற்சியே என்று தெரிய வருகிறது.அது ஒரு அமைப்பேயல்ல என்றும் கூறப்படுகிறது.பைடனுகான அமைப்பு என்று எதுவும் ஒரு கட்டமைப்பாக இல்லை என்றாலும் வேறு சில அமைப்புக்கள் புதிய அமெரிக்க அரசாங்கத்தின் வெற்றிக்காக பெருமளவுக்கு உழைத்திருகின்றன. இந்த அமைப்புக்கள் ராஜீயச் செல்வாக்கு மிக்க அமைப்புகளா என்பது இனித் தெரியவரும்.
ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஒரு சமூகம் அமெரிக்கக் கண்டத்தில் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதற்கு ஒரு ஆகப்பிந்திய உதாரணத்தை இங்கு சுட்டிக் காட்டலாம். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனேடியப் பிரதமர் ஏன் கருத்துத் தெரிவித்தார்? விவசாயத்தின் மீதுள்ள காதலினாலா? இல்லை. இந்தியாவில் வேளாண் மசோதாவுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளில் அநேகர் சீக்கியர்கள். கனடாவில் பலமான ஒரு சீக்கியச் சமூகம் உண்டு. கனடாவில் மொத்தமாக கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சீக்கியர்கள் உண்டு. இது மொத்தக் கனேடிய சனத்தொகையில் கிட்டத்தட்ட 1.4 விகிதம் என்று கூறப்படுகிறது. இப்போதுள்ள கனேடிய நாடாளுமன்றத்தில் பதினெட்டு சீக்கியர்கள் உண்டு அவர்களில் பாதுகாப்பு அமைச்சரும் உட்பட நால்வர் அமைச்சர்கள். எனவே கனேடியப் பிரதமர் தனது சீக்கிய வாக்காளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். இதுவும் நலன்சார் அரசியல்தான்.
அதேசமயம் கனடாவில் வசிக்கும் ஈழதமிழர்களின் எண்ணிகையும் மூன்று லட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. எனவே எப்படித் தம்மை ஒரு ராஜீயச் செல்வாக்குள்ள சமூகமாகப் பலப்படுத்துவது என்று அங்குள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு ராஜீயச் செல்வாக்குடைய சமூகமாகப் பலமடையும் போது அது தாயக அரசியலில் தாக்கம் செலுத்தும்.
ஒரு அபிப்பிராயம் அல்லது நியாயம் அரசியல் தீர்மானமாக மாற்றப்படுவது என்றால் அதற்கு லொபி செய்ய வேண்டும். எப்படிப்பட்ட லொபி என்றால் அந்த சிறிய மக்கள் கூட்டத்தின் நலன்களும் வெளியரசுகளின் நலன்களும் எந்த ஒரு பொதுப் புள்ளியில் சந்திக்கின்றனவோ அப்பொதுப் புள்ளிகளை வைத்துப் பேரத்தை பேச வேண்டும். அப்படிப் பேரம் பேசினால்தான் சிறிய தேசிய இனங்களுக்கு மீட்சி கிடைக்கும். இந்த இடத்தில் ஒரு பொருத்தமான ஆபிரிக்க பழமொழியை கூற வேண்டும். “நீ நீதியின் பக்கம் நிற்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்து கொள்ளும் என்று முடிவெடுத்து விடாதே ஏனென்றால் சிங்கத்தை நீ சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாமல் விடாது “
நிலாந்தன்