பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று, அதனை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டனர். இதனால் சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இதில், கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது. அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆன்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் விசாரணைக்கு ஆஜராக மெகுல் சோக்சிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, மெகுல் சோக்சிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சிறப்பு கோர்ட்டு பிறப்பித்தது. மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே, வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.இதனால் சோக்சியின் குடும்பத்தினர் வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளனர். இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ள வழக்கறிஞரை அழைத்துள்ளனர். ஆன்டிகுவா போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமரான கேஸ்டன் பிரவுனி நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) கூறுகையில், மெகுல் சோக்சிக்கு எதிராக 2 வழக்குகள் உள்ளன. அவர், நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கான நம்பத்தகுந்த தகவல் எதுவும் எங்களிடம் இல்லை. அவர் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் இன்னும் வசித்து வரலாம். அவரது இருப்பிடம் பற்றி கண்டறிய போலீசார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.