கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் பேசிய அவர்,
சிங்கள தேசம் தமிழர்கள் மீது தனிச் சிங்கள மொழிச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டபோது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அகிம்சையை ஆயுதமாக்கி போராடிய பெருந்தலைவர் தந்தை செல்வா.அவரினால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும் தமிழர்களின் உரிமைக்காக எப்போதும் பாடுபடும்.
கடந்த தேர்தல் காலங்களில் எமது கட்சியை வீழ்த்தப் பாடுபட்டவர்களுக்கு இன்று தமிழ் மக்கள் பதில் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.இந்த நாட்டில் பலம் பொருந்திய ஆயுதப் போராட்டம் இருந்தது. அதன் தொடக்கம் தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.