கர்தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகைக்கு ஞானசார தேரர் அறிவுரை

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஞானசார தேரர் அறிவுரை

இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.நுவரெலியா அமோகராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. அறவழி மத கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் இஸ்லாமிய மத கொள்கையினை தவறான வகையில் புரிந்துகொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு ஏனைய மதங்கள் மீது வேறு தாக்குதல்களை முன்னெடுக்கிறார்கள்.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அரச ஆதரவுடன் தலைத்தூக்குகிறது என்பதை ஆரம்ப காலத்தில் இருந்து ஆதாரத்துடன் தெரிவித்தோம். எமது கருத்தை அரச தலைவர்களும், இஸ்லாமிய மத தலைவர்களும், இஸ்லாமிய அரசியல்வாதிகளும், ஏனைய மத தலைவர்களும் பொருட்படுத்தவில்லை .இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து நாங்கள் குறிப்பிட்ட கருத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி எங்களை இனவாதிகளாக சித்தரித்து அரசியல் இலாபம் தேடிக் கொண்டார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் பாரதூரமான விளைவுகள் குறித்து எவரும் அக்கறை கொள்ளவில்லை. அனைத்து தரப்பினரது கவனயீனத்தையும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையின் எத்தன்மையில் வலுப் பெற்றுள்ளது என்பதை 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச தலைவர்களும், ஏனைய மத தலைவர்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் புரிந்துகொண்டார்கள்.

குண்டுத்தாக்குதலில் அப்பாவி மக்கள் மாத்திரமே பலியானார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதகொள்கையினை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது பல்வேறு விசாரணைகள் ஊடாகவும்,குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த அடிப்படைவாதிகளின் காணொளி ஆதாரங்கள் ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கையினால் ஈர்ககப்பட்டவர்கள் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள் என்று மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நாளையுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகுகின்றன.இவ்வாறான நிலையில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் மத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது அல்ல அத்தாக்குதல் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது உள்ள பிரச்சினைகளை அவர் தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை இவ்விடயத்தில் இரட்டை முகவராக செயற்படுகிறார் என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *